பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறவிருக்கும் போட்டியாளர்களுடன் கமல்ஹாசன் உரையாடுவதை முன்னோட்டக் காணொளியாக வெளியிட்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழு. ஆனால் அதில் வெளியேறும் ஆள் யார் என்பது தெரியவில்லையே என்பது பார்வையாளர்கள் ஆதங்கம். 16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறவிருக்கும் போட்டியாளர்களுடன் கமல்ஹாசன் உரையாடுவதை முன்னோட்டக் காணொளியாக வெளியிட்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழு. தமிழில் பிக்பாஸ் நான்காவது பருவம் 25 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பதினேழாவதாக அதிரடி நுழைவு அனுமதி மூலமாக அர்ச்சனா உள்ளே வந்தார். இரண்டாவது கிழமையில் குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா. கடந்த கிழமையில் ஆஜித் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற இருந்த நிலையில் தன்னிடம் உள்ள சிறப்பு அனுமதியை வைத்து தப்பித்தார். இதையடுத்து இந்த கிழமை வெளியேற்றப் பட்டியலில் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் சனம், பாலாஜி, ரியோ, சோம்சேகர் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் இந்தக் கிழமை காப்பாற்றப்பட்டதாக நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார். மீதமிருக்கும் 5 பேரில் ஒருவர் தான் இன்று வெளியேறப்போகும் ஆளாக இருப்பார். இந்நிலையில் வெளியேற்ற ஆளின் பெயர் அடங்கிய அட்டையுடன் முன்னோட்டக் காணொளியில் தோன்றியிருக்கும் கமல்ஹாசன், ஆஜித்தைப் பார்த்து இந்தக் கிழமை வெளியேறப்போவது யார் என்ற கேள்வியைக் கேட்கிறார். அதற்கு ஆஜித் மவுனம் காக்க, வேல்முருகன் நான் வெளியே போவேன் என நினைப்பதாக கமல்ஹாசனிடம் தெரிவிக்கிறார். அதற்கு நீங்கள் இப்போது சோதிடர் ஆகிவிட்டீர்களா என்று நகைச்சுவையாக கேட்கிறார் கமல்ஹாசன். இதையடுத்து வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீட்டிலிருந்து ஒருவரை வழியனுப்புவது போல் முன்னோட்டக் காணொளி முடிவடைகிறது. இதனிடையே பாடகர் வேல்முருகன் தான் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



