வாகனங்களில் செல்லும்போது இனிமேல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்பீடு போன்ற ஆவணங்களைக் கையில் வைத்திருக்கத் தேவையில்லையாம். கையில் நமது மிடுக்குப் பேசி இருந்தால் போதும். 16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: வாகனங்களில் செல்லும்போது இனிமேல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்பீடு போன்ற ஆவணங்களைக் கையில் வைத்திருக்கத் தேவையில்லை. வாகனங்களில் செல்லும்போது ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்பீடு போன்ற உண்மை ஆவணங்கள் இல்லாவிட்டால், ஓட்டுனரிடம் அபராதம் விதிக்கப்படும் நிலை இருந்தது. ஆனால் உண்மை ஆவணங்களை கொண்டு செல்லும் போது அவை தொலைந்து விட்டால் மறுபடியும் அதைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகளும் வாகன உரிமையாளர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் இன்றிலிருந்து எம்-பரிவாகன் என்ற செல்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் உங்களது ஆவணங்களை சேமித்து வைத்துக்கொண்டால் வாகன சோதனையின்போது காண்பித்துக் கொண்டு சென்றுவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி செல்லும் கடந்த வருடமே மத்திய அரசு இது போல ஒரு அறிவுரையை வெளியிட்டிருந்த போதிலும் தற்போது சட்ட ரீதியாக இந்த உத்தரவுக்கு கிடைத்துள்ளது. கடந்த வாரம் விதிமுறையில் ஏற்படுத்தப்பட்ட இந்த மாற்றத்தின்படி, அக்டோபர் எம்-பரிவாகன் மட்டுமின்றி, டிஜிலாக்கர் என்ற செயலியிலும் உங்கள் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து, காவலர்களிடம் காண்பித்துச் செல்லலாம். ஒரு செல்பேசி இருந்தால் எந்த ஆவணமும் இன்றி, உங்களால் இனி வாகனங்களில் பயணிக்க முடியும். ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை இந்த செயலிகள் ஏதாவது ஒன்றில் முறையாக தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் காப்பீட்டை நீங்கள் தரவேற்றம் செய்ய முடியாது. உங்கள் காப்பீட்டை உங்கள் காப்பீட்டு நிறுவனமே தரவேற்றம் செய்து விடும். உங்கள் வாகனச்சான்றிதழ் பதிவில் உங்கள் காப்பீடு செல்லத்தக்க காலம் முடிந்திருந்தால் அதில் தெரிந்து விடும். உண்மையில் உங்கள் வாகன எண்ணை காவலர்கள், தங்கள் செல்பேசியில் உள்ள எம்.பரிவாகன் செயலில் பதிவிட்டுப் பார்த்தாலே வாகனச்சான்றிதழ் நிலை, காப்பீட்டு நிலை ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். உங்கள் ஓட்டுநர் உரிம எண்ணைக் கேட்டுப் பெற்று உங்கள் ஓட்டுநர் உரிம நிலையையும் அறிந்து கொள்ள முடியும். நமது செல்பேசியை வாங்கிக் பார்க்காமலே காவலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள சட்டவகை செய்தால், நம்முடைய தனித்துவம் மற்றும் விலை உயர்ந்த பொருளாக இருக்கிற நமது செல்பேசியை மற்றவர்கள் கையாளும், அதுவும் பெரும்பாலும் அடாவடியாக இருக்கிற காவலர்கள் கையாளும் கட்டாயம் எழாமல் போகும். அரசும் அறங்கூற்று மன்றங்களும் யோசித்தால் நல்லது.
விபத்து, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட மோசமான நேரங்களில் கூட வாகனம் மற்றும் வாகன ஓட்டியின் ஆவணங்களை காவல்துறை பறிமுதல் செய்ய தேவையில்லை. இயங்கலை மூலமாகவே முடக்கிவிட முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



