நாட்டின் தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் இருந்து எந்த நகரமும் முதல் பத்து இடத்தைப் பிடிக்கவில்லை. 40வது இடத்தை கோயம்புத்தூரும், 42வது இடத்தை மதுரையும் 45வது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன என்கிறது, நடுவண் அரசின் தூய்மைக் கண்காணிப்பு ஆய்வு 05,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாட்டின் தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் இருந்து எந்த நகரமும் முதல் பத்து இடத்தைப் பிடிக்கவில்லை. 40வது இடத்தை கோயம்புத்தூரும், 42வது இடத்தை மதுரையும் 45வது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன. நடுவண் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிகழ்வுகளுக்கான அமைச்சகம் நாட்டில் தூய்மை நகரங்களின் பட்டியலை தூய்மைக் கண்காணிப்பு 2020 என்ற திட்டத்தின் கீழ் வெளியிட்டு இருந்தது. தூய்மை, நலங்கு, மக்கள் தொகை அடிப்படையில் நகரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் பத்து லட்சம் பேர் வசிக்கும் மக்கள் தொகை நகரங்கள் பட்டியலின் அடிப்படையில் 40வது இடத்தை கோயம்புத்தூரும், பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வசிக்கும் நகரங்களின் அடிப்படையில் 42வது இடத்தை மதுரையும், 45வது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன. ஒன்று முதல் பத்து லட்சம் மக்கள் தொகை நகரங்களின் அடிப்படையில் திருச்சி 102வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் 159வது இடத்தை திருநெல்வேலியும், 173வது இடத்தை சேலமும், திருப்பூர் 223வது இடத்தையும் பிடித்துள்ளன. நாட்டிலேயே தொடர்ந்து முதல் இடத்தை இந்தூரும், இரண்டாம் இடத்தை சூரத்தும், மூன்றாம் இடத்தை நவி மும்பையும், நான்காம் இடத்தை டெல்லியும் பிடித்துள்ளன. உலகின் மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றான, இந்த தூய்மைக் கண்காணிப்பு ஆய்வு 4242 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் 1.9 கோடி பேரிடம் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



