கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேதா துறைக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சித்த மருத்துவ துறைக்கு வெறுமனே 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவுமான அதிர்ச்சித் தகவலை நடுவண் அரசே தெரிவித்துள்ளது. 05,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதோடு மட்டுமல்லாது, நடுவண் அரசு, அதன்மீது பாராமுகமாக செயல்படுவதாக சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி காணொளி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பரம்பரை சித்த மருத்துவர் தணிகாசலத்தை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை இரத்து செய்யக் கோரி தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள், சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைப் பதிகை செய்திருந்தார். இந்த வழக்கு அறங்கூற்;றுவர்கள் கிருபாகரன், வேலுமணி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்திய மருத்துவ துறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட மருத்துவ துறைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை பதிகை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையைப் படித்து அதிர்ச்சி அடைந்த அறங்கூற்றுவர்கள், நடுவண் அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது ஏன் எனவும், சித்த மருத்துவத்துக்கு, பிற மருத்துவ துறைகளை விட குறைந்த நிதி ஒதுக்கியுள்ளது முரண்பாடானது எனவும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரில் இருந்து, சித்த மருத்துவத்தைக் குறிப்பிடும் ‘எஸ்’ என்ற எழுத்தை நீக்கிவிடலாம் என கண்டனம் தெரிவித்தனர். இதுசம்பந்தமாக விளக்கமளிக்க காலவரையறை வழங்க வேண்டும் என நடுவண் அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற அறங்கூற்றுவர்கள் விசாரணையை அடுத்த கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.
அப்போது, நடுவண் அரசுத்தரப்பில் பதிகை செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேதா துறைக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சித்த மருத்துவ துறைக்கு வெறுமனே 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



