Show all

தட்டிப் பறிக்கும் வடமாநிலங்கள்! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 13விழுக்காடு சரிவு

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 13 விழுக்காடு  குறைந்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 13 விழுக்காடு  குறைந்துள்ளது சமூக ஆர்வலர்களிடையேயும், தமிழ்ஆர்வலர்களிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்தாண்டு தமிழகத்தில் 1,34,714 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்தனர். நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களின் விண்ணப்பித்த எண்ணிக்கையே 13 விழுக்காடு குறைந்துள்ளது. கொரோனா அச்சத்தல் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் கூட குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகம் போலவே கேரளாவிலும், பாண்டிச்சேரியிலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் குஜராத்;, உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் விழுக்காடு அதிகரித்து இருக்கிறது. அந்த அதிகரித்த மாணவர்கள் தென்மாநிலங்களுக்கே படிக்க வருவார்கள். தமிழகப் பெற்றோர்கள் செலுத்திய வரியில் வட மாநிலத்துக்காரன் மருத்துவக்கல்வி பெறப்போகிறான். 

கிராமப்புற மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதுபவர்களின் விழுக்காடு குறைந்து வருகிறது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு மாநில தேர்வு முறையில் படிக்கும் மாணவர்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக தமிழகத்தின் கிராமப்புற மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத பயப்படுகின்றனர். 

வடமாநிலத்திற்கு பயிற்றுவிக்கும் நடுவண் கல்வி வாரியப் பாடத்திட்டத்திற்கு பொருந்துகிற வகையில் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது வினாத்தாள் எப்படி அமையப்போகிறது என்பது அவர்கள் பாடத்திட்டத்தில் தயாரிக்கப்படுவதால் அவர்களுக்கு விடை முன்னதாகப் பயிற்றுவிக்கப்பட்டு விடுகிறது. இது நடுவண் பாடத்திட்டத்தின் மீது கவர்ச்சியை உருவாக்குவதற்கானதேயன்றி தகுதி அடிப்படையானது அன்று என்று அனைத்துக் கல்வியாளர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தே இருக்கிறது.

தென்மாநிலங்கள் மீதான குறிப்பாக அதிக கல்லூரிகள், அதிக மருத்துவ மனைகளைக் கொண்டிருக்கிற தமிழகத்தின் கல்வி உரிமையைக் களவாடவே- இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் முன்னெடுப்பது போன்ற அநியாயம் முன்னெடுக்கப்படுகிறது. 

இதனால்தான் நீட் தேர்வை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவ இடஒதுக்கீடுகளை மற்ற மாநிலங்களில் இருக்கும் மாணவர்கள் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் வாய்ப்பு ‘தேர்வு’ என்ற முறையில் பறிக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள், கல்வி நிலையங்கள் இணைந்து இதற்கு நல்ல முடிவை எட்ட வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பமும். கொரோனா கால கட்டத்தில் இதுபோன்று நீட் தேர்வுகளை நடத்துவது நகரங்களில் இருக்கும் பணக்கார பெற்றோர்களின் பிள்ளைகளுக்குத்தான் சாதகமாக அமையும். கடந்த ஐந்து மாதங்களாக ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு இணைய வசதி இல்லை. நூலகங்களுக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.