இந்தச் சூழ்நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது பெரிய நகரங்களில் வசிக்கும் பணக்கார குழந்தைகளுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்பதை அரசு உணர்ந்து கொள்ளவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சாமி. 10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய மாணவர்களுக்கு அதிக மருத்துவ இடங்களை பிடுங்கிக் கொடுக்கும் நோக்கத்திற்காக நடுவண் பாஜக அரசு அந்த மாணவர்கள் படிக்கும் பாடத்திட்ட அடிப்படையில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் சேர்த்து நீட் என்றவொரு தேர்வை அடாவடியாக நடத்தி வருகிறது. கொரோனா பரவல் சூழ்நிலையிலும், மாணவர்கள் பாதிக்கப்படக்கூடுமே என்கிற அக்கறை கொஞ்சமும் இல்லாமல் இந்த ஆண்டும் நீட் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறது நடுவண் பாஜக அரசு. இந்தத் சூழ்நிலையில்- மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு நீட், நடுவண் அரசின் பொறியியல் மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது பெரிய நகரங்களில் வசிக்கும் பணக்கார குழந்தைகளுக்கு மட்டுமே கலந்து கொள்ள முடியும். அவர்களுக்கும் பாதுகாப்பு என்பது உறுதியில்லாத ஒன்றே. எனவே இது குறித்து தலைமைஅமைச்சர் இரக்கம் காட்டலாம் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா நுண்நச்சுப் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் செப்டம்பர் மாதத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என நடுவண் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்தது. அதன்படி, கடந்த கிழமை ஜேஇஇ தேர்வுக்கான அனுமதிச்சீட்டுக்கள் வெளியிடப்பட்டன. எடுத்துக்காட்டாக கள்ளக்குறிச்சி சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு சேலம் சின்னத்திருப்பதியில் உள்ள ஜெயராம் கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று நான்கு பேருந்துகள் ஏறிச்செல்லும் தூரம். ஆனால் பேருந்துகளும் இல்லை. தமிழகத்தில் பயணத்திற்கு மின் அனுமதி வேறு தேவையாய் உள்ள நிலையில், வாடகை கார் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வு எழுதச் செல்லுவது பெருஞ்செலவும் பாதுகாப்பு இன்மையும் ஆகும். தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்வுகளை ரத்து செய்யுமாறு நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கீச்சுவில் பதிவிட்டுள்ளதாவது: இந்த சூழ்நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது பெரிய நகரங்களில் வசிக்கும் பணக்கார குழந்தைகளுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்பதை அரசு உணர்ந்து கொள்ளவில்லையா? கடந்த 5 மாதங்கள் ஏழை, நடுத்தர வர்க்க குழந்தைகளுக்கு இணையதள வசதியோ, நூலகங்களுக்கு சென்று படிக்கும் வசதியோ இல்லை. தலைமை அமைச்சர் இரக்கம் காட்டலாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



