Show all

ஒன்றிய அரசு சுற்றறிக்கை! தடுப்பூசி கையிருப்பு, வழங்கல்- சேமிப்பு நிலை குறித்த தரவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டாம்

தடுப்பூசி கையிருப்பு, வழங்கல் நிலை, சேமிப்பு நிலை குறித்த தகவல்கள், தரவுகளை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசுகளிடம் கையளித்துவிட்டு வெறுமனே சட்டாம்பிள்ளை வேலை பார்த்து வந்த ஒன்றிய பாஜக அரசு, மூன்று மாநிலத் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர், மதவாதம் மட்டுமே தங்களை இந்தியாவில் தக்கவைக்கப் போதாதோ என்ற புரிதலுக்கு வந்துள்ளது. அதன் பொருட்டாய் தற்போது இலவச கொரோனா தடுப்பூசிக்கு வேலைபார்த்து வருகிறது. 

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி இருப்பு விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம் என ஒன்றிய பாஜக அரசு மாநில அரசுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசிகள் ஒன்றிய அரசின் மூலமாக மாநில அரசுகளுக்கு கொண்டுதருதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் தடுப்பூசி கையிருப்பு, செலுத்தப்பட்டவை உள்ளிட்ட தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள ஒன்றிய நலங்கு அமைச்சகம் தடுப்பூசி கையிருப்பு, வழங்கல் நிலை, சேமிப்பு நிலை குறித்த தகவல்கள், தரவுகளை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சுற்றறிக்கை இரண்டு நாட்கள் முன்னதாக அனுப்பப்பட்ட போதிலும் தமிழ்நாடு அரசு தடுப்பூசி தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.