Show all

விரும்பிய தொலைக்காட்சி காட்சிமடைகளைத் தேர்வு செய்ய புதிய செயலி அறிமுகம்! தற்போதைக்கு சன் நேரடிக்கு இது பயன்படாது


தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய காட்சிமடைகளைத் தேர்ந்தெடுக்க புதிய செயலி ஒன்றை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், தொடங்கி இருக்கிறது. தற்போதைக்கு சன் நேரடிக்கு இது பயன்படாது

13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், பயனர்கள் தாங்கள் விரும்பும் காட்சி மடைகளை (டிவி சேனல்) மட்டுமே தேர்வு செய்து அதற்கான கட்டணம் செலுத்தும் வசதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தது.

ஆனால் இந்தத் திட்டம் திருப்திகரமாக அமையவில்லை, என்று தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய காட்சிமடைகளைத் தேர்ந்தெடுக்க புதிய செயலி ஒன்றை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், தொடங்கி இருக்கிறது.

அதன்படி தொலைக்காட்சி செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேவை நிறுவனங்கள், கம்பிவடச் சேவையாளர்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்தச் செயலி இயங்குகிறது. இதில் செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேவை நிறுவனங்கள், வழங்கும் ஒவ்வொரு காட்சிமடைக் கட்டணமும், செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேவை நிறுவனங்கள் கட்டணமும், காட்சிமடைத் தொகுப்புகளின் கட்டணமும் இடம்பெற்று இருக்கும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் விரும்பிய காட்சிமடைகளைத் தேர்வு செய்வதுடன், தேவையற்ற காட்சிமடைகளை நீக்கியும் விடலாம் பின்பு கொடை (சந்தா) விவரங்களையும் இந்தச் செயலியில் சரிபார்த்துக் கொள்ளலாம் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், தெரிவித்துள்ளது.

இந்தச் செயலியைப் பயன்படுத்த எளிமையாக இருக்கும். அதன்படி வழங்கப்பட்ட பட்டியலிலிருந்து நுகர்வோர் தங்கள் செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேவை நிறுவனங்கள், கம்பிவடச் சேவையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் செல்பேசி எண், போன்ற விவரங்களை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
 
இதை அடுத்து, கொடையாளர் செயற்கைக்கோள் ஒளிபரப்பு சேவை நிறுவனங்கள், கம்பிவடச் சேவையாளர்கள் நமக்கு வழங்கியுள்ள வாடிக்கையாளர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர்கள் விரும்பும் காட்சிமடைகளைச் சேர்க்க அல்லது நீக்க மற்றும் இறுதியாக சமர்பிக்க கொடையை மதிப்பாய்வு செய்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட காட்சிமடைகளின் பட்டியலை குறைந்த விலையில் பெறவும், பணத்திற்கான மதிப்பை வழங்கவும் சேவைத் தளத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு அவர்களின் கொடைத் திட்டத்தை மேம்படுத்த பயனருக்கு உதவுகிறது என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிப்படையாக இந்தச் செயலி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

பரிசோதனை முயற்சிக்காக இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து சோதித்த போது, தமிழகத்தில் அதிக மக்களின் பயன்பாட்டில் இருக்கும் சன் நேரடி. செயற்கைக் கோள் ஒளிபரப்பு சேவை நிறுவனம் இதில் இன்னும் இணைக்கப்படவில்லை என்று அறிய முடிந்தது. தற்போதைக்கு இந்தச் செயலி, சன் நேரடி. செயற்கைக் கோள் ஒளிபரப்பு சேவை நிறுவனத்தோடு தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பயன்படாது என்று அறிய முடிகின்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.