சேலம் சென்னை எட்டுவழிச் சாலைக்கு உயர்அறங்கூற்றுமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை செல்லும். மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச அறங்கூற்றுமன்றம் 23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச் சாலைக்கு உயர்அறங்கூற்றுமன்றம் விதித்த தடை செல்லும் என்று உச்சஅறங்கூற்றுமன்றம் கூறியுள்ளது. ரூபாய் 10,000 கோடி செலவில் சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை அமைப்பதற்கான அரசாணை வெளியானதிலிருந்து உழவர்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த அரசாணையில் திட்டத்திற்காக 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும் இந்தத் திட்டத்திற்கும் எதிராகத் தொடரப்பட்ட வழக்கில். உயர் அறங்கூற்றுமன்றம் சாலை அமைப்பதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதோடு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அடுத்த எட்டு மாதங்களுக்குள் மீண்டும் உழவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. நிலத்தைக் கையகப்படுத்துவதில் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறவில்லை. எந்த ஒரு திட்டம் தொடங்குவதற்கு முன்பும் சுற்றுச்சூழல் அனுமதி மிகவும் கட்டாயம். நிலம் கையகப்படுத்துவதில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என்று உயர்அறங்கூற்றுமன்ற தீர்ப்பின் போது கூறப்பட்டிருந்தது. அதேபோல, நிலம் கையகப்படுத்தப்பட்ட போது அந்த பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படவில்லை. மக்களின் எதிர்ப்புகளையும் மீறி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் கருத்துகளைக் கூறப்பட்டிருந்தது. உயர்அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் அமர்வு இந்த வழக்கில் இரண்டு தரப்பிலும் கருத்துக்களைக் கேட்டறிந்தது. சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் வழங்கிய தடை செல்லும் என்று ஒன்றிய நெடுஞ்சாலை ஆணையம் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அறங்கூற்றுவர் கன்வில்கர் தலைமையிலான அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அந்த பகுதி உழவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில், இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.