Show all

மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்! இந்தியாவிற்கு தேசிய மொழியும் இல்லை, தேசிய விளையாட்டும் இல்லை, தேசிய மலரும் இல்லை

இந்தியாவிற்கு தேசிய மொழியும் இல்லை, தேசிய விளையாட்டும் இல்லை, தேசிய மலரும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து மாணவர்களின், மக்களின் குழப்பத்தை நீக்குவதோடு, இந்தத் தவறான தகவலை தெரிவித்து ஹிந்திக்கும், பாஜகவிற்கும் கூடுதல் வலுசேர்க்கும் முயற்சிகளை முறியடித்தாக வேண்டும். 

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் தேசிய மலராகத் தாமரையை இந்திய குடிஅரசு அறிவிப்பின் போது அங்கீகரிக்கப்பட்டது. தாமரை மலரை ஆன்மீகத்துடனும், தூய்மையுடனும் தொடர்புபடுத்துகின்றனர். ஆகையால், தாமரையானது இந்தியாவின் தேசிய மலராக தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால்- இந்திய தகவல் அறியும் சட்டத்தின் கீழ், இந்திய தாவரவியல் ஆய்வு மையத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தாமரையானது இந்தியாவின் தேசிய மலர் அல்ல என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா குடிஅரசாக அறிவிக்கப்பட்டது முதல் நமது தேசிய மலர் தாமரை என்று மக்களால் நம்பப்பட்டு வருகின்றது. மேலும், பள்ளி பாடப்புத்தகங்களில் தொடங்கி அனைத்து குறிப்பேடுகளிலும் தாமரை இந்தியாவின் தேசிய மலர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாம் நினைப்பது போன்று தாமரை இந்தியாவின் தேசிய மலர் இல்லை என்ற உறுதியான தகவல் வெளிவந்துள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோவை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வரும் ஐஸ்வர்யா பராசர் என்பவர், தாமரை இந்தியாவின் தேசிய மலராக அறிவிக்கப்படுள்ளதா? என்பதை அறிய தகவல் அறியும் சட்டத்தின் கீழ், இந்திய தாவரவியல் ஆய்வு மையத்தில் விண்ணபித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஆய்வு மையத்தின் நிர்வாக அதிகாரி தபஸ் குமார் க்கோஷ், தாமரை இந்தியாவின் தேசிய மலர் அல்ல. மேலும், இந்தியாவிற்கு தேசிய மலர் என்று எந்தவொரு மலரும் அரசால் அங்கீகரிக்கப்பட்டவில்லை என்று கூறியுள்ளார்.

பள்ளி பாடத்திலும், மற்றவர்கள் கூறியதையும் கேட்டு வந்த ஐஸ்வர்யா தனக்கு எழுந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ள தகவல் அறியும் சட்டத்தை நாடியதாகக் கூறியுள்ளார். மேலும், இந்திய அரசின் அதிகாரபூர்வமான இணையப் பக்கங்களில் கூட தேசிய மலர் தாமரை என்றே தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

எனவே, குழப்பங்களை தீர்க்க தாமரையை இந்தியாவின் தேசிய மலராக கூறப்பட்டு வரும் தவறான தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பான குழப்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த முறை மோடி இந்தியத் தலைமைஅமைச்சராக இருந்த போதே அவர்களுக்கு கடிதம் ஒன்றையும் ஐஸ்வர்யா எழுதியுள்ளார்.

ஆக, நம் பாடப்புத்தகங்களில் இருப்பது போன்று இந்தியாவிற்கு தேசிய மொழியும் இல்லை, தேசிய விளையாட்டும் இல்லை, தேசிய மலரும் இல்லை என்று தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில்தான் தற்;போது புதியதாக எல்லைக்கடவில் தாமரையை அச்சிட்டு புதிய குழப்பத்திற்கு வழி வகுத்திருக்கிறது இந்தியாவை ஆளும் வாய்ப்பு பெற்றிருக்கிற பாஜகஅரசு.

மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தில், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகவன், எல்லைக்கடவில் தாமரையை அச்சிட்டு புதிய குழப்பத்திற்கு வழி வகுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அவர் தனது பேச்சின் போது, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிதாக விநியோகிக்கப்பட்டு இருக்கும் எல்லைக்கடவில் தாமரை முத்திரை இடம் பெற்றுள்ளது. இது குறித்து நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளது. பாஜகவின் கட்சி சின்னமான தாமரை எல்லைக்கடவில் இடம் பெறுவது ஏன்? நாட்டை காவி மயம் ஆக்கும் பாஜகவின் முயற்சியா? என்று ராகவன் கேள்வி எழுப்பினார். 

இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த அடாவடி குறித்து கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர். 

இதனிடையே இந்தச் சிக்கல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘புதிய எல்லைக்கடவில் பாதுகாப்பு அம்சமாக தேசிய மலரான தாமரை அச்சிடப்பட்டுள்ளது. என்று தாமரை தேசியமலரே என்ற குழப்பத்தை மீண்டும் விதைத்துள்ளார். 

இந்தியாவிற்கு தேசிய மொழியும் இல்லை, தேசிய விளையாட்டும் இல்லை, தேசிய மலரும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து மாணவர்களின், மக்களின் குழப்பத்தை நீக்குவதோடு, இந்தத் தவறான தகவலை தெரிவித்து ஹிந்திக்கும், பாஜகவிற்கும் கூடுதல் வலுசேர்க்கும் முயற்சிகளை முறியடித்தாக வேண்டும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,365.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.