Show all

பணத்தேவைக்காக, நம்பி பயணித்தவரை, கொலை செய்த ஓட்டுநர்! பலியானார் விளம்பரஅழகாளர் பூஜா

அதிகாலை பயணத்திற்கு திடீர் அறிமுக நபரை நம்பியது விளம்பரஅழகாளர் பூஜா உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானது.

09,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெங்களூரு நகரில் கடந்த 26 நாட்களுக்கு முன்பு காலை 6.30 மணிக்கு விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே ஒரு பெண்ணின் உடலைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த உடலின் அருகே துப்புத் துலக்குவதற்கான தடயம் எதுவுமே இல்லை.

இதனால், இறந்த பெண்ணை அடையாளம் காண்பதில் காவல்துறையினருக்கு சிக்கல் எழுந்தது. கர்நாடகா மாநிலத்தில் காணாமல் போன பெண்களின் அடையாளங்களோடும் இந்தப் பெண்ணின் அடையாளம் ஒத்துப் போகவில்லை. 

விமான நிலையம் அருகே உடல் கண்டுபிடிக்கப்பட்டதால், மற்ற மாநில காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பயனாக கொல்கத்தாவைச் சேர்ந்த பூஜா சிங்தான் கொலை செய்யப்பட்டவர் என்ற தகவல் தெரியவந்தது. பூஜா விளம்பரஅழகாளர் துறையில் பணியாற்றி வருவதுடன் நிகழ்வு மேலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கொலை செய்யப் படுவதற்கு முதல் நாள் பெங்களூரு நகருக்கு தனது தொழில் தொடர்பாக வந்தார் என்ற தகவலும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, விசாரணையை தீவிரப்படுத்தியதில் ஓலா கேப் ஓட்டுநர் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், கொல்கத்தா விளம்பரஅழகாளர் பூஜா சம்பவத்திற்கு முதல் நாள் பெங்களூரூ வந்தார். அன்று மாலை கிரெஸன்ட் சாலையில் இருந்து பரப்பன அக்ரஹாரவில் இருக்கும் தனியார் விடுதிக்குச் செல்ல ஓலா வாடகைவண்டியை பயணக்கேட்புக்கு அழைத்துள்ளார். அப்போது ஓட்டுநர் நாகேஷ் என்பவர் அவரை உணவகத்தில் விட்டுள்ளார்.

மறுநாள் அதிகாலை பூஜாவுக்கு விமானம் இருந்ததால், அதே ஓட்டுனரைப் பின்னர் பேசியில் தொடர்புகொண்டு, அதிகாலை 4 மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டும். வர முடியுமா எனக் கேட்டுள்ளார். அவரும் சம்மதித்துள்ளார். அதன்படி அவரை அதிகாலை 4.15 மணிக்கு ஓசூர் சாலையில் இருந்து விமானம் நிலையம் அழைத்துச் செல்ல நாகேஷ் வந்துள்ளார்.

பின்னர் பாதிவழியில் விமானநிலையம் செல்லாமல் வேறு திசையில் காரை திருப்பியதுடன் ஆள் இல்லாத இடத்தில், தனக்கு பணத்தேவை இருப்பதாகவும், அதனால் கையில் இருக்கும் பணத்தைக் கொடுக்கும்படி மிரட்டியுள்ளார். ஆனால் பூஜா மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட, காரில் இருக்கும் ஜாக்கி கம்பி கொண்டு கடுமையாகத் தாக்கினார்.

பின்னர், அவரது பைகளை சோதனையிட்டபோது அதில் 500 ரூபாய் மற்றும் இரு செல்பேசிகள் மட்டுமே இருப்பதைப் பார்த்து கோபமடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குப் பின்னால் இருக்கும் இடத்தில் அவரைத் தள்ளிவிட நினைத்தார் ஓட்டுநர். ஆனால், அதற்குள் பூஜாவுக்கு நினைவு திரும்பி காரிலிருந்து தப்பிக்க முயன்றார்.

அதனால் தன்னிடம் இருந்த கத்தி மற்றும் கையில் கிடைத்த கல்லைக் கொண்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பூஜா நிலைகுலைந்து பலியானார். பின்னர் விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே அவரது உடலை வீசிவிட்டு தப்பிவிட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கு பணத்தேவை இருந்ததும், காருக்கு கடந்த 2 மாதங்களாக தவணை கட்டாததும் தெரியவந்தது என்றனர் காவல்துறையினர்.

இது போன்ற பெரு நகரங்களில் தனியாக, இரவில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் செயலி மூலம் பயணக்கேட்புக்கு அழைத்து பயணம் செய்வது பாதுகாப்பானது என்றும் ஆபத்து நேரங்களில் செயலியில் இருக்கும் அவசர வசதி மூலம் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாம். காவல்துறையினருக்கும் பாதை தெரிவிக்க வசதியாக இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பூஜா முதல் நாள் செய்தது இந்த வகையான பாதுகாப்பான பயணம்தான். மறுநாள் காலை அவர் நேரடியாக ஓட்டுநரை அழைத்து பயணித்தது, அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் போனது. என்பது பாதுகாப்பான பயணத்திற்கு ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,256.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.