கண்துடைப்பு நடவடிக்கையில் ஏமாந்து விடாதீர்கள். நீங்கள் அனுபவிக்கும் ஊரடங்கு சுமையில் உங்கள் கண்கள் வெளிப்படுத்தும் கண்ணீரை நீங்களே துடைத்துக் கொள்ளுங்கள். கொரோனா பாதுகாப்பிற்கு மட்டுமல்ல- பொருளாதார பாதுகாப்பிற்கும் சமூக இடைவெளி உங்களுக்கு பாதுகாப்பே தரும். யாருடைய கண்துடைப்பிலும் ஏமாந்து விடாதீர்கள். கண்ணைக் குத்தி விடுவார்கள். கடன் தவணையை ஒத்தி வைத்து, நனைந்து சுமக்க வேண்டாம். 09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கு பாதிப்பை முன்னிட்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி, வங்கிகளில் வீட்டுக் கடன் மற்றும் வாகனக்கடன் வாங்கியவர்களின் 3 தவணைகளை ஒத்தி வைக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது. ஆனால் அதை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனென்றால் நாம் கட்டாமல் ஒத்தி வைக்கிற தவணைகளை, புதிய கடனாக அனுமதித்து, அதை தவணைகள் முடியும் போது, துணைத் தவணைகளாக கூட்டு வட்டியுடன் வங்கிகள் வசூலிக்கும். இந்த நிலையில் இன்னும் ஊரடங்கு பாதிப்புகள் முடிவுக்கு வராத நிலையில் தொடர்ந்து கடனாளர்கள் சலுகையை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த நேரத்தில், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி மேலும் 3 மாதங்களுக்கு தவணைகளை ஒத்திப் போடலாம் என்று சொல்லி இருக்கிறது. ஒருவேளை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி சொன்ன, 6 மாத கடன் தவணைகளை ஒத்திப் போடும் வசதியை நாம் பயன்படுத்திக் கொண்டால் நமக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும்? பொருளாதார நிபுனர்களின் கருத்தைக் கேளுங்கள். இந்தக் கடன் தவணை ஒத்திவைப்பால், வாடிக்கையாளர்களுக்கு வட்டிச் சுமை பயங்கரமாக அதிகரிக்கும். எவ்வளவு அதிகரிக்கும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம். அமுதன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மாதம் ஒரு இலட்சம் சம்பளம். அவர் வங்கியில் 10விழுக்காடு வட்டிக்கு, 20 ஆண்டுகளில் (240 மாத தவணை) திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 55 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். தற்போது மாதம் 53,076 ரூபாய் மாத தவணையாக செலுத்திக் கொண்டு இருக்கிறார். இப்போது மேலே சொன்னது போல 6 மாத கடன் தவணைகளை ஒத்திப் போட்டுவிட்டார் எனவும் வைத்துக் கொள்வோம். முதல் தவணை ஒத்திவைப்பின் போது மொத்த கடன் நிலுவைத் தொகை 55,00,000 ரூபாயாக இருக்கும். 55 லட்சம் ரூபாய்க்கு வட்டியை கணக்கிடுவார்கள். ஆக 55 லட்சம் ரூபாய்க்கு 45,833 ரூபாய் வட்டி வரும். முதல் மாதத் தவணை செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 55 லட்சம் ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். இரண்;டாவது தவணை ஒத்திவைப்பின் போது மொத்த கடன் நிலுவைத் தொகை 55,45,833 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,215 ரூபாய் வட்டி வரும். இரண்டாம் மாதமும் தவணை செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை, 55,45,833 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். மூன்றாவது தவணை ஒத்திவைப்பின் போது மொத்த கடன் நிலுவைத் தொகை 55,92,049 ரூபாயாக அதிகரித்து இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,600 ரூபாய் வட்டி வரும். மூன்றாம் மாதமும் தவணை செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை, 55,92,049 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். இப்படியாக- ஆறு மாதங்களுக்கு முன் 55 லட்சம் ரூபாயாக இருந்த கடன் அசல் தொகை, 6 மாதங்களுக்குப் பின் 57.80 லட்சமாக அதிகரித்து இருக்கும். அசல் தொகை 2.8 லட்ச ரூபாய் அதிகரித்துவிட்டது. இப்போது இந்த கூடுதல் அசலுக்கு வட்டி, வட்டிக்கு குட்டி என பயங்கரமாக நாம் வங்கிக்குச் செலுத்த வேண்டி இருக்கும். மேலே சொன்னது போல 57,80,793 ரூபாய் அசலுக்கு அதே 240 மாதங்களில் கடனை அடைக்க வேண்டும் என்றால் தவணை 53,076 ரூபாயில் இருந்து 55,786 ரூபாயாக அதிகரிக்கும். அமுதன்; 6 மாத தவணைகளை ஒத்திப் போடவில்லை என்றால் 72.38 லட்சம் வட்டியாகச் செலுத்துவார். ஆனால் இப்போது 6 மாத தவணைகளை ஒத்திப் போட்டதால் 76.07 லட்சம் செலுத்துவார். 3.69 லட்சம் வட்டி கூடுதலாகச் செலுத்துவார். அமுதன் செலுத்தும் 53,076 ரூபாய் தவணையே தொடர வேண்டும் என்றால், அமுதன் 240 மாதங்களுக்கு பதிலாக, 288 மாதங்களுக்கு தவணை செலுத்த வேண்டும். இந்த புதிய தவணை 53,032 ரூபாயாக இருக்கும். அமுதன் 6 மாத தவணைகளை ஒத்திப் போடவில்லை என்றால் 72.38 லட்சம் வட்டியாகச் செலுத்துவார். ஆனால் இப்போது 6 மாதம் ஒத்திப் போட்டு, 288 மாதங்களுக்கு தவணை நீட்டித்து இருப்பதால் 94.92 லட்சம் வட்டி செலுத்துவார். 22.54 லட்சம் ரூபாய் கூடுதலாக வட்டியைச் செலுத்துவார் நம் அமுதன். தவணைகளை ஒத்திப் போடுவதற்கு முன், இந்த கணக்கீடுகளை ஒரு முறை பார்த்துவிடுங்கள். எப்படியாவது சமாளித்துவிடலாம் எனத் தோன்றினால் தயவு செய்து கடன் தவணைகளைச் செலுத்துங்கள். 6 மாத தவணை ஒத்திப் போட்டு பின் லட்சக் கணக்கில் கூடுதலாக வட்டி செலுத்தாதீர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



