Show all

லாலிபாப்பா? காங்கிரஸ் விளாசல்! உயிர் காக்கும் மருந்தான கொரோனா தடுப்பூசியை தேர்தல் வாக்குறுதியாக்கியுள்ளது பாஜக

பீகார் மாநிலம் முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக கூறுவது மக்களுக்கு அக்கட்சி வழங்கும் தேர்தல் லாலிபாப் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகார் மாநிலம் முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக கூறுவது மக்களுக்கு அக்கட்சி வழங்கும் தேர்தல் லாலிபாப் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு முதல்முறையாக பீகார் மாநிலத்தில் மிகப் பெரிய தேர்தலான சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 12,18,22,ஐப்பசி (அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7) ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

பீகாரில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்து ஜேடியு-பாஜக கூட்டணி ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஆர்ஜேடி இன்னொரு அணியாகவும் மோதுகின்றன. 

இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாட்னாவில் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மாநிலம் முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் செர்கில் கூறுகையில் கொரோனா தடுப்பூசியை தேர்தல் லாலிபாப் என கருதும் ஒரே கட்சி பாஜகதான். கொரோனாவுடன் பாஜகவின் கெட்ட எண்ணத்திற்கும் சிகிச்சை தேவை என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூறுகையில் கொரோனா தடுப்பூசி என்பது பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது இந்தியாவுக்கும் சொந்தமானது என கீச்சுவில் கருத்து தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறாத மாநிலங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என பாஜகவிடம் கிண்டலாகவும் கேள்வி எழுப்பியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.