Show all

சீனப் பொருள் புறக்கணிப்பு! ‘குடி குடியைக் கெடுக்கும், ‘சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ போன்ற கலாச்சாரமாக மட்டுமா

‘சீனப் பொருள் புறக்கணிப்பு’ புதியதொரு கலாச்சாரத்திற்கான தலைப்பா? கோவையில் சீனப்பொருட்களைப் புறக்கணிப்போம் என்று ஒரு குழுவினர் போராட்டம் நடத்தி நான்கைந்து சீனப் செல்பேசிகளை தெருவில் வீசி எறிந்தார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது பழுதாகிப் போன பழையச் சீனச் செல்பேசிகளே. 

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ‘குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்’ என்றும், ‘சிகரெட் பிடிப்பது உடல் நலத்;திற்கு தீங்கானது’ என்றும் பதாகைகளை எழுதி வைத்து விட்டு வஞ்சனையில்லாமல் வணிகம் செய்வது நமது கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கிற புதிய தலைப்பு “சீனாப் பொருட்களைப் புறக்கணிப்போம்” என்பதாகும். 

சீன பொருட்களை நாம் முற்றிலுமாக புறக்கணிப்பது என்பது சாத்தியமா? இது நடைமுறைக்கு ஒத்துவருமா? என்றெல்லாம் ஆய்வுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. 

கோவையில் சீனப்பொருட்களைப் புறக்கணிப்போம் என்று ஒரு குழுவினர் போராட்டம் நடத்தி நான்கைந்து சீனப் செல்பேசிகளை தெருவில் வீசி எறிந்தார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது பழுதாகிப் போன பழையச் சீனச் செல்பேசிகளே. 

நம் வீரர்களின் கொடூர மரணம், இனி யாருமே சீன பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று ஆவேச முடிவை எடுக்க வைத்துள்ளது. நாட்டு பற்றுடன் இந்த முடிவை உணர்ச்சிவசப்பட்டு எடுத்துள்ளோமே தவிர, இது நடைமுறையில் சாத்தியமாகக் கூடியதா என்பதையும் யோசித்து பார்க்க வேண்டி உள்ளது. மிகச்சாதாரணமாக நம்மில் முக்கால்வாசிப் பேர் பயன்படுத்தும் செல்பேசிகள் சீன தொழில்நட்பத்தில் தயாரானவைகள்தாம். 

நம் வீடுகளில் பயன்படுத்தும் முக்கால்வாசி பொருட்களும் சீனாவின் கைவண்ணமே. தலைவலி மாத்திரை முதல் குழந்தைகள் விளையாடும் பொம்மை வரை. ஏன் கொசு அடிக்கும் பேட் வரை சீனாவின் முகம் அப்பட்டமாக பளிச்சிடுகிறது! 

எல்லை பிரச்சனை அன்றிலிருந்தே இழுத்து வந்தாலும், சீன பொருட்களின் மீதான மோகம் குறையாமல் இருந்து வந்தது. இது சீனாவின் மீதான மோகம் அல்ல. தரம்- மலிவு- வசதிப்பாடு என்கிற தொழில் நுட்பத்தின் மீதான மோகம்தான் அது. 

இந்திய தயாரிப்புகளை வாங்குவோம் என்று நாம் வாங்கிய கார்பன், மைக்ரோமேக்ஸ் பேசிகள் நம்முடைய கையில் இருந்த நேரத்தை விட பழுது நீக்கும் கடைகளில் இருந்த நேரம்தாம் அதிகம். அப்படியிருந்த அந்தப் பேசியும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தாங்காத காரணத்தால் அந்த நிறுவனங்களும் தாங்க முடியாமல் கூடாரத்தை காலி செய்தன. ஆக சீனாவைப் புறக்கணிப்பது எளிதல்ல. ஏனென்றால் நம்ம ஊர் சந்தை மொத்தமாக சீன கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 

தன்னுடைமைப் பொருளாதாரம் என்பது நம்மிடம் இல்லை. நாம் பாஜகவை நம்பி வாக்களித்ததே பாஜக இந்தியாவிற்கான தன்னுடைமைப் (சுயசார்பு) பொருளாதரத்தை முன்னெடுக்கும் என்று நம்பியே. ஆனால் பாஜகவின் சுயசார்பு என்பது காங்கிரஸ் முன்னெடுத்து வந்த ஹிந்தியோடு ஹிந்துத்துவா மட்டுந்தாம் என்பது தற்போதுதாம் புரிகிறது.

இந்தியாவில் மாநிலங்களின் முயற்சியால்தாம் இந்தியப் பொருளாதாரம் நின்று கொண்டிருக்கிறது. நடுவண் அரசாக நேற்றைய காங்கிரசு ஹிந்தி அதிகாரம் இரண்டையும் முன்னெடுத்தது. இன்றைய பாஜக ஹிந்தி, ஹிந்துத்துவா முழுமையான அதிகாரம் ஆகிய மூன்றையும் முன்னெடுக்கிறது.

இந்தியாவிற்கு தேசியகட்சி என்று ஒன்று இருக்கும் வரை, இந்தியாவில் வெற்று அதிகாரம் மட்டுந்தாம் ஓடிக்கொண்டிருக்கும். இந்தியாவில் சுயசார்பு பொருளாதாரம் முன்னெடுக்கப்பட வேண்டுமானல் இந்தியாவில் மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சி நடைமுறைக்கு வரவேண்டும்.

மேலும் உற்பத்தி கச்சா எண்ணெய்யை நாம் அதிகமாக இறக்குமதி செய்வதே சீனாவிடமிருந்துதான். சீனாவை பொறுத்தவரை தெளிவாக உள்ளது. உள்ளூரில் உற்பத்தி. வெளிநாடுகளில் விற்பனை என்று சந்தையை விரிவுபடுத்தி கடை விரித்துவிட்டது. சீனாவிடம் எல்லா வகையான பொருளும் உள்ளூரிலேயே உற்பத்தியாகிறது. நாம் அப்படி இல்லை. இந்த மாதிரி நம்மால் இந்தியாவை உயர்த்த முடியமா என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

ஒருவேளை சீனாவிடம் இருந்து இறக்குமதியை குறைத்தாலும், அமெரிக்காவிடமிருந்து பொருட்களை வாங்குவோமே தவிர சுய சார்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு நம்மிடம் இன்னும் அணு அளவிற்குக்கூட வரவில்லை. பொம்மைகள், மிடுக்குப் பேசிகள், தொலை தொடர்பு உபகரணங்கள், தொலைக்காட்சி உட்பட வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், எஃகு பொருட்கள் என அந்நாட்டு இறக்குமதிகளை உடனடியாக கைவிட முடியுமா? சிவகாசி பட்டாசுகளை தடை செய்து விட்டு சீனப் பட்டாசுகளை அதிகம் பயன்படுத்தலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு போடப்பட்டது. அதில் எந்த அரசும் அந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

இன்னமும்கூட சீனப் பட்டாசுக்கு வக்காலத்து வாங்குவோரும், சிவகாசி பட்டாசை அழிக்க வேண்டும் என்று வரிந்து கட்டுவோரும் வடக்கில் அதிகமாகவே உள்ளனர். பட்டாசுக்கே இந்த நிலை என்றால், உதிரிபாகங்கள், மருந்து பொருட்களுக்கான தற்சார்பு கிடைக்குமா? 

சீமான் ஒருமுறை சொன்னாரே, தக்காளி, வெங்காயம் எல்லாமே இறக்குமதி பண்ண வேண்டிய நிலைமை வந்துடும். தற்சார்பு எங்கே? என்று அவர் கேட்டது நியாயமான கேள்வியே! ஒருவேளை சீன பொருட்களைப் புறக்கணித்தால், அங்கிருக்கும் தொழில்நிறுவனங்களை சார்ந்திருக்கும் பெருமுதலாளிகள் டிவிஎஸ், டாடா, அசோக் லேலண்ட், போன்றோர் இதனை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதும் சந்தேகம்தான். 

ராம்தாஸ் அத்வாலே அதற்காக சீன உணவகங்களை மூட வேண்டும், பிரைட் ரைஸ், நூடுல்ஸ் தவிர்க்கப்பட வேண்டும் என்று நடுவண் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே போல பகடியாடிக் கொண்டிருக்க முடியாது. அது வெறுமனே உணர்ச்சி அரசியல் செய்ய மட்டுமே பயன்படும். 

ஆக்கப்பூர்வமாக நமக்கு அரை விழுக்காடு கூட பயன் தராது. நம்மிடம் சீனா இறக்குமதி செய்வதைவிட, நாம்தான் அதிக எண்ணிக்கையில் பொருட்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறோம். ஒரு கணக்கிற்காக, சீனாவிலிருந்து இந்தியா 100 விழுக்காடு இறக்குமதி செய்கிறது என்று வைத்துக் கொண்டால்- சீனாவோ நம்மிடம் வெறும் 20விழுக்காடு மட்டுமே இறக்குமதியை நம்பி உள்ளது. ஆக, இந்திய சந்தைக்குள் சீன பொருட்களின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால் சீன வர்ததக புறக்கணிப்பு சாத்தியமேயில்லை. 

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி சொல்கிறார். ‘சீன பொருட்களுக்கு கிடைக்கும் சந்தை வாய்ப்பை பறித்து, நமது உற்பத்தி பொருட்களுக்கு வழங்குவது தான் எனது நோக்கமாக இருந்தது. அந்தத் திட்டத்தை இந்த பாஜக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்ததா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. நமது எல்லையில் சீனா தாக்குதல் நடத்திய பிறகு சிலருக்கு அந்த நாட்டு பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று இப்போது அறிவுக்கண் திறந்துள்ளது. சீன பொருட்களை புறக்கணிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயம். என்கிறார். 

ஒருவேளை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்று இந்தியா கறாராக முடிவெடுத்துவிட்டால், சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். சுதேசி பொருட்களைதான் வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டுமென்றால், காங்கிரசும். பாஜகவும் முதலில் மாநிலக்கட்சியாக மாறிவிட வேண்டும். அதுதாம் சுதேசியம். இரண்டாவது மாநிலத்து அரசியலுக்கு ஆசைப்பட்டால் அது சுதேசியம் இல்லை ஆதிக்கம். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.