Show all

வீட்டிலிருந்தே கொரோனாவிற்கு சிகிச்சை மேற்கொள்ளலாம்! தவறாமல் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளோடு, மேலும் கூடுதலாக சில

கொரோனா பாதிப்புள்ளவர்கள், தங்களை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என நடுவண் அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு கட்டாயமாக சில நிபந்தனைகளும்  விதித்திருந்தது. இப்போது அந்த வழிமுறைகளில் மேலும் சில வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளது.

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சு தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறி காணப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தங்களை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என நடுவண் அரசு அனுமதி வழங்கியிருந்தது. இப்படித் தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் தொடர்பாக அரசு சில வழிமுறைகளையும் வழங்கியிருந்தது.

அதன்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நபருக்கு எனத் தனியாக அறை இருக்க வேண்டும். மாவட்ட நலங்குத் துறை அதிகாரி குறித்த நபரின் நலநிலை குறித்துக் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை நடுவண் அரசு வழங்கியிருந்தது.

இந்நிலையில், இப்போது அந்த வழிமுறைகளில் மேலும் சில வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நபர்களை மருத்துவர் ஒருவர் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். இப்படிச் செய்வதால் நோயாளியின் மனதில் நம்பிக்கை பிறக்கும்.

அதேபோல் தனிமைப்படுத்திக் கொள்ளும் நபர் வைக்கப்படும் அறையில் கழிவறை வசதி தனியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

அதே வேளையில் நலங்கு அமைச்சகமும் குறித்த நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

குறிப்பாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நபர்கள், நடுவண் நலங்கு அமைச்சகத்தின் இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் படிவத்தை நிரப்பி அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நபர்கள் 14 நாட்கள் வெளியே வரக்கூடாது. 

இதுகுறித்த மேலும் தகவல்களை https://www.mohfw.gov.in/pdf/Guidelinesforhomequarantine.pdf என்ற இணைப்பக்கத்தில் பெறலாம். 
தனிமைப்படுத்திக் கொள்ளும் படிவத்தை https://www.mohfw.gov.in/pdf/RevisedguidelinesforHomeIsolationofverymildpresymptomaticCOVID19cases10May2020.pdf  இணையப்பக்கத்தில் பெறலாம்.

வீட்டில் வைத்தே சிகிச்சை குறித்து நடுவண் அரசு முன்;பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:
கொரோனா தொற்று பரவுவதை உடைக்க மக்களின் உதவியோடு சில அறிவுரைகளை அரசு வழங்குகிறது. கொரோனா மையங்கள் மூலமாக வழங்கப்பட்ட அறிவுரை காரணமாகவோ, லேசான அறிகுறிகள் உடையவர்களாகவோ நீங்கள் காணப்பட்டால் அச்சப்பட வேண்டாம். மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் வீட்டிலிருந்தபடியே முதலில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

லேசான அறிகுறிகளோடு மருத்துவரின் அறிவுரைகள் வழங்கப்பட்டால் நீங்கள் வீட்டிலே உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும். அதேபோல் மாநில அரசுகள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உதவிக்கு ஒருவரை பணியமர்த்த வேண்டும். இருவரும் 3 அடுக்கு மருத்துவ முகமூடி அணிய வேண்டும். என்பதாகத் தெரிவித்திருந்தது.

கொரோனா வந்தால் வீட்டில் வைத்தே சிகிச்சை குறித்த புது உத்தரவு!
உதவியாக இருக்கும் நபர் எந்த காரணத்திலும் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. உதவியாளர் எளிதாக அருகில் உள்ள மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். உதவியாளர் பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சில மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் விட நடுவண் அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது செயலியைக் கண்டிப்பாக தங்கள் செல்பேசியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கொரோனா அறிகுறிகளோடு காணப்படும் நபரின் நிலை குறித்து அன்றாடம் மாவட்ட நலங்கு அலுவலர் தகவல் சேகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.