Show all

உள்ளுக்குள் எதற்கு இத்தனை பீடிகைகள்! கடன்களுக்கு மாதத்தவணை கட்டுவதை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கலாமாம்! கட்டுப்பாட்டு வங்கிஅனுமதியாம்

நடுவண் அரசு 21நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து கொஞ்சமாவது மீள, ஏதாவது நிவரணம் கிடைக்காதா என்று காத்திருக்கும் மக்களுக்கு கிடைப்பது மதிப்பு மிக்கதாகவே புலப்படுகிறது.

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத் தடுக்க நடுவண் அரசு 21நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதில் பொது மக்கள் அடையும் பாதிப்பிற்கு தமிழக அரசு நிவாரணமாக ரூபாய் ஆயிரமும், விலையில்லா பொருட்கள் ரூபாய் எண்பதுக்கும் வழங்குகிறது. இல்லாது ஊருக்கு இலுப்பைபூ சர்கரை என்று கொண்டாட வேண்டியதுதாம்.

நடுவண் அரசு சில சலுகைகளை அளித்திருக்கிறது. கொரோனா வந்தவர்களைக்கூட எளிமையாகத் தேடிக் கண்டு பிடித்து விடலாம் அந்தச் சலுகைகளை அனுபவிக்க தகுதியானவர்கள் யார் யார் என்பதைக் கண்டு பிடிப்பது அவ்வளவு சிரமம்.

அடுத்து நம்ம இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஒரு சலுகை அறிவித்திருக்கிறது. அந்த சலுகையை யாரும் அனுபவித்துவிட முடியாமல் உள்ளுக்குள் எதற்கு அத்தனை பீடிகைகள். அனைத்து வகை கடன்களின் மாதாமாதத் தவணைகளை 3 மாத காலம் ஒத்தி வைக்கலாம் என்று வங்கிகளுக்கு, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அனுமதி (உத்தரவு அல்ல)  வழங்கியுள்ளது. 

விசாரித்த வகையில் எந்த வங்கியும் அதை நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொள்ளவில்லை.

நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தவணை முறையில் செலுத்தும் வகையாக பொருட்களை வாங்கியுள்ளனர். இப்போது பணிக்கு செல்ல முடியாமல் ஊரடங்கில் இருப்பதால் அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நடுத்தர வர்க்கம் தரப்பில், வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு ஒத்திப்போட வேண்டும், என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில்தான், இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனைத்து வகை தனி நபர் கடன்களின் தவணைகளை 3 மாத காலம் ஒத்தி வைக்கலாம். இதற்கு இந்தியக்கட்டுபாட்டு வங்கி (உத்தரவிடவில்லை) அனுமதிக்கிறது. அடுத்து வருகிறது இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி ஆளுநர் சக்திகாந்ததாசின் பீடிகைகள்:- 

இந்த 3 மாதங்கள், கடன் திரும்ப வரவில்லை என்றால், இதை வராக்கடனாக கருதக்கூடாது. கடன் கட்ட வக்கில்லாதவர்கள் என்று பட்டியல் இட்டு, அடுத்த வங்கியை கடன் வாங்க அணுக முடியாத படி விளம்பரப் படுத்த சிபில் என்று ஒரு அமைப்பு உள்ளது. அந்தப் பட்டியலில் இவர்களைச் சேர்க்க கூடாது. கடன் செலுத்தாததால் திவால் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதில் தவணைகள் ஒத்திப்போடப்பட்டுள்ளதே தவிர, 3 மாதங்களுக்கான கடனும், வட்டியும், தள்ளுபடி செய்யப்படவில்லை. ஒருவர் 60 மாத காலத்திற்கான கடனை வாங்கியிருந்தால், அவர் 60 மாதங்களும் கடன் வட்டியை கட்டித்தான் ஆக வேண்டும். இந்த கட்டாத மூன்று மாதத் தவணைகளுக்கு தனியாக வட்டி கூடிக்கொண்டிருக்கும். அதையும் கடன் முடிப்பு காலத்தில் கட்டி முடித்தாக வேண்டும். 

வங்கிகள் தவணைகளை 3 மாதங்கள் ஒத்தி வைக்கலாம் என இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி அனுமதி அளித்துள்ளதே தவிர கட்டாயப்படுத்தியதாக சொல்ல முடியாது அந்தந்த வங்கிகள்தான், தவணைகளை ஒத்திவைப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். 

ஒருவேளை உண்மையிலேயே எல்லா வங்கிகளும் தவணைகளை 3 மாதங்கள் ஒத்தி வைக்குமேயானால் நல்லதுதான். அப்படியொரு வாய்ப்பு கணிய வேண்டும் என்றே அவரவர்கள் தங்கள் தங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொள்வோம். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.