பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்லாத பணத்திற்கு மாற்றாக ஒரு ரூ2000 தாளைப் பெற, வரிசையில் காத்திருந்து மரணம் அடைந்தோர் வரலாறும் உண்டு. ஆனால் தற்போது வெளிவந்திருக்கிறது ஒரு வேடிக்கையான கதை: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்களைப் பயன்படுத்தி ஒரு உல்லாச விடுதி, இரண்டு வணிகவளாகங்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகளை வாங்கினாராம் சசிகலா. 07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் எட்;டாம்நாள் இரவு 8 மணியளவில் தலைமைஅமைச்சர் மோடி, நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்களை செல்லாது என்று அறிவித்தார். கருப்புப் பணம் மற்றும் கள்ள ரூபாய்தாள்களை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், சற்று சிரமம் இருந்தாலும் வரும் காலத்தில் இதற்கான பலன்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். கிடைத்த தென்னவோ ஒவ்;வொரு ஆண்டும் அந்த நாளை கருப்பு நாளாகக் கொண்டாடும் சோகந்தான். மழைநின்றாலும் தூவணம் விடாத கதையாக பணமதிப்பு முன்னெடுக்கும் புதுப்புதுச் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணமாய் இருக்கிறது. புதியதாக எழுந்திருக்கிற சிக்கல்: ரூ2000தாள்களின் கதை. இது போன மாதம். மோடி முன்னெடுத்த அந்தக் கருப்புநாளைத் தொடர்ந்து ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் தாள்களுக்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000 தாளை- கள்ளத்தனமாக அச்சடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்தே வந்தது. அண்மையில் பேசிய முன்னாள் நிதித் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க், 2000 ரூபாய் தாள்களை செல்லாதவையாக அறிவிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், புழக்கத்தில் இருக்கும் ரூபாய் தாள்களில் மூன்றில் ஒரு பங்கு 2000 ரூபாய் தாள்களாக இருப்பதாகவும், அவை அதிகளவில் பதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால், மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு வருமோ என்று மக்கள் அச்சமடைந்தனர். இது ஒருபக்கம் இருக்க, 2000 ரூபாய் தாள் அச்சடிப்பதை கட்டுப்பாட்டு வங்கி முற்றிலும் நிறுத்தியது. இதனால், மக்களிடையே 2000 ரூபாய்தாள் புழங்குவது குறையும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். தற்போது, பணம்வழங்கும் இயந்திரங்களிலும் 2000 ரூபாய் தாள்கள் குறைவாகவே கிடைக்கின்றன. இந்த நிலையில், சமூக வலைதளங்கள் வழியாக ரூ.2000 தாளை அடுத்த மாதம் முதல் மாற்ற முடியாது எனவே உடனடியாக உங்கள் கையில் இருக்கும் 2000 ரூபாயை வங்கியில் செலுத்தி மாற்றிவிடுங்கள் என்று ஒரு தகவல் வெளியானது. இந்த தகவல்கள் பரவும் நிலையில், கிராமப் புறங்களில் தற்போது 2000 ரூபாய் தாளை கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இதனால், பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். அனைத்திற்கும் அடிப்படையான பணத்தின் மீது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்த மோடியின் பாஜக அரசை- பொருளாதார அறிஞர் பெருமக்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்தமாதம், (அதுபோன மாதம், இது இந்தமாதம் என்ற வடிவேலு- படத்தில் பகடியாடுவதைப் போல) இப்போது வெடித்திருக்கும் புதிய குண்டு! பணமதிப்பிழப்பு ரூபாய் தாள்களைக் கொண்டு சசிகலா சொத்து வாங்கியதாக உயர்அறங்கூற்றுமன்றத்தில் வருமானவரித்துறை அறிக்கை வழங்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட ரூபாய் 500- 1000 தாள்களை, வணிகவளாகங்கள் வாங்க சசிகலா பயன்படுத்தினார் என சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான பாதிப்புகளாக இல்லாமல்- சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தலைப்பில்- இதை சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை பதிகை செய்து உள்ளது. ‘பலி ஒருபக்கம் பாவம் ஒருபக்கம்’ என்று தமிழில் ஒரு சொலவடை உள்ளதே அதைப்போல. மூன்றாண்டுகளுக்கு முன்னம் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்களைப் பயன்படுத்தி ஒரு உல்லாச விடுதி, இரண்டு வணிகவளாகங்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகளை சசிகலா வாங்கினாராம். இவைகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளவை ஆகும் எனவும் கூறி உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,372.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.