நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று நேற்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி பேசினார் 30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாடாளுமன்ற மழைக்கால பாராளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நீட் தேர்வை இரத்து செய்வது தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு திமுக சார்பில் கவனஅறிக்கை கொடுப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்களவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது: நீட் தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 12 பேர் தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வை மிகுந்த துயரத்துடனும், வலியுடனும் நடுவண் அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். தமிழகத்தில் மாநில அரசு பாடத் திட்டத்தின்படி 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களால் அதற்கு தொடர்பில்லாத ஒன்றிய அரசு பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது; முடியவில்லை. இதனால் மாணவர்கள் மனஉளைச்சல், சிரமங்கள், ஏமாற்றத்துக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அகில இந்திய அளவில் தேர்வுகளை நடத்துவதால் மாநிலப் பாடத் திட்டங்களை கவனத்தில் கொள்வதில்லை. எனவே, ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி முன்னதாக நேற்றுகாலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு டி.ஆர்.பாலு தலைமையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “சமூக, பொருளாதார அடிப்படையாக பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை நீட் தேர்வு தகர்த்துள்ளது. எனவே, நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக போராடும்” என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



