Show all

கருநாடாகவில் போராட்டம்! ஹிந்திநாள் கொண்டாடுவது ஒன்றிய அரசின் கடமையல்ல. ஹிந்திக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமையை இரத்து செய்க

கருநாடக மக்கள் கொஞ்சம் கூடுதல் அறிவுப்பாடாக மொழிப்போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். ஒன்றிய அரசு ஹிந்திக்கு விழா எடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று தெளிவாக கேள்வி எழுப்புகின்றார்கள்.

30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைப் போற்றுவார் வள்ளுவர் பெருமகனார். அந்த வகையில் நம்மைவிட சிறப்பாக மொழிப்போரை முன்னெடுக்கிற கர்நாடகாவை வாழ்த்திப் பாராட்ட வேண்டியது தமிழ்மக்கள் கடமையாகும்.

எல்லா மாநில ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், ஒன்றிய அரசு ஹிந்தி நாள் விழா கொண்டாடி வருகின்றது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் தாராளமாக ஹிந்தி நாள் விழா கொண்டாடட்டும். எல்லா மாநில ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், ஒன்றிய அரசு ஹிந்தி நாள் விழா கொண்டாடுவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதாக, கருநாடாகவில் மொழிப்போராட்டம் அறிவுப்பாடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஹிந்தியை தேசிய மொழியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டிருப்பதாக கருநாடக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மூன்றாவது மொழியாக ஹிந்தியை திணிப்பது சுயநலத்துடன் கூடிய அரசியல் அடிப்படையிலானது என்று அவர்கள் முழக்;கமிட்டனர். 

மாநிலத் தலைவர்கள் தமிழகம். வங்காளம், கேரளம், கருநாடகம் என்று ஆங்காங்கே உணர்ச்சிப்பாட்டுடன் தோன்றியிருந்த போதும்- எழுச்சிபெறாத நிலையில், பிரித்தானிய அரசு பெரும்பான்மையாக இருந்த ஹிந்தி வெறியர்களிடம் ஒன்றிய ஆளுமையை ஒப்படைத்துச் சென்றது. 

ஹிந்தி வெறியர்கள் களவாணித்தனமாக- ஒருங்கிணைப்பில் இருக்கிற ஆங்கிலத்தின் இடத்தில் ஹிந்தியை நிறுவ வேண்டும் என்பதான சிறப்பு உரிமையை ஹிந்தி மொழிக்கு ஒன்றிய அரசியலமைப்பில் அமைத்துக் கொண்டனர். 

அதற்குப் பிறகு மாநிலங்கள் போராடி மொழிவழி மாநிலங்கள், அட்டவணை எட்டில் குறிப்பிட்டபடி தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கு ஒன்றிய அரசின் அலுவல் மொழித்தகுதி பெற்றுவிட்ட போதும் கூட, ஹிந்திக்கு அமைத்துக் கொண்ட  சிறப்பு உரிமை இரத்து செய்யப்படாடமல் தொடர்வதை நிறுத்த வேண்டும். உடனடியாக அரசியல் அமைப்பு சட்டத்தில் ஹிந்திக்கு அமைத்துக் கொண்ட  சிறப்பு உரிமையை இரத்து செய்து அட்டவணை மொழிகள் 22க்கும் அந்த இடத்தை அமைக்க வேண்டும் என்று கர்நாடக மக்கள் கோரிக்கை வைத்துப் போராடுகின்றனர்.
 
கர்நாடகாவில் அனைத்து ஒன்றிய அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளும் கன்னட மொழியில் நடத்தப்படவேண்டும் ஹிந்திநாள் கர்நாடகாவில் கொண்டாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் முழக்கமிட்டனர். வட இந்தியாவின் உத்தரவை கர்நாடகா எதற்கு கேட்க வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். பெங்களூர் தொடர்வண்டி நிலையம், பெங்களூர் உள்ளூர் தொடர்வண்டி நிலையங்களுக்கு எதிரே கன்னட மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பெண்களும் திரளாக பங்கேற்று ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டனர். 

ஒன்றிய அரசு அலுவலகங்களில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழிக்கும் பணிகளையும் போராட்டத்தில் கன்னட மக்கள் ஆர்வமாக முன்னெடுத்தனர். 

ஹிந்தி மொழிக்கு இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமை இரத்து செய்யப்பட வேண்டும். கர்நாடகாவில் அனைத்து ஒன்றிய அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளும் கன்னட மொழியில் நடத்தப்படவேண்டும். ஹிந்தி நாள் கர்நாடகாவில் கொண்டாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. வட இந்தியாவின் உத்தரவை கர்நாடகா எதற்கு கேட்க வேண்டும் போன்ற முழக்கங்கள் வானளாவ ஒலித்து விசும்பில் கலந்தன.

கர்நாடக, முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம், தலைவருமான எச்.டி. குமாரசாமி, ஹிந்தி அல்லாத மொழி பேசும் சமூகங்கள் மீது ஹிந்தி திணிப்பதை கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். கன்னடத்தில் பத்து கீச்சுகளை வரிசையாக அவர் வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார். 

மேலும் ஹிந்தி ஒருபோதும் ஒரு தேசிய மொழி அல்ல, அது ஒருபோதும் தேசிய மொழியாக மாறாது. நமது அரசியலமைப்பு அனைத்து மொழிகளுக்கும் ஒரே தகுதியை வழங்கியுள்ளது. எனவே, டெல்லியில் அமர்ந்திருக்கும் மக்கள் வேறுவிதமாக சிந்திக்கக் கூடாது. ஹிந்திநாள் கொண்டாடுவது, ஹிந்தியைத் தேசிய மொழியாக திணிப்பதற்கான மென்மையான வழியாகும். இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று பதிவுகளில் தெரிவித்துள்ளர் குமாரசாமி.

தமிழர்களாகிய நாம், நம்மீது ஹிந்தியைத் திணிக்க வேண்டாம் என்று மட்டும் கேட்டோம்; போராடினோம்; களத்தில் பலரின் உயிரை காவு கொடுத்தோம். கருநாடக மக்கள் இன்னும் சற்று தெளிவாகவே- ஹிந்தி மொழிக்கு இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமை இரத்து செய்யப்பட வேண்டும் போராடுவது பாரட்டிற்குரியது. நம்மைப் போல் அவர்கள் எந்த இழப்புகளையும் எதிர் கொள்ளாமல் வெற்றிபெற வேண்டும். வெல்க கன்னட மக்களே என்று வாழ்த்துவோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.