தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக அறங்கூற்றுமன்றத்தில் வாதம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்- தமிழக அரசுக்கு எதிராக அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு அறங்கூற்றுவர்கள் அனுமதி அளித்துள்ளார்களாம். 29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்பாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம், அறங்கூற்றுவர் கிருபாகரன் அமர்வில் முறையிட்டார். அப்போது, அறங்கூற்றுமன்ற உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தாதலேயே மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருவதாகவும், தற்கொலைகளை தடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதைக் கேட்ட அறங்கூற்றுவர்கள், தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் தற்கொலைகளை அரசியல்வாதிகள் பெரிதுபடுத்தக் கூடாது எனவும், அப்போது தான் தற்கொலைகள் குறையும் என்றும் அறங்கூற்றுவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அறங்கூற்றுமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு அறங்கூற்றுவர்கள் அனுமதி வழங்கினர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



