சீன நிறுவனங்களிடமே கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் திருப்பி அனுப்பப்பட உள்ளன. இரு நிறுவனங்களின் பொருட்களும் தரக்குறைவாக இருப்பதால் கேட்பு இரத்து செய்யப்படுகிறது. இதனால் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் வாங்கப்பட்ட வகையில், இந்தியாவிற்கோ தமிழகத்திற்கோ இழப்பு ஏதும் இல்லை. 14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவில் இருந்து இரு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்ட கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டாம். அதை மீண்டும் திருப்பி அனுப்புங்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவிலிருந்து வாங்கப்பட்ட கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளின் பரிசோதனை முடிவுகள் 95 விழுக்காடு தவறாக வருவதாக அண்மையில் இராஜஸ்தான் மாநில அரசு குற்றம் சாட்டியது. கொரோனா நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்தால் கூட நோய் இல்லை என்று காண்பிக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திடம் புகார் தெரிவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்துவதை நிறுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உத்தரவிட்டது. சீனாவின் குவாங்ஜூ நகரைச் சேர்ந்த வாட்போ பயோடெக், ஜூஹாய் லிவ்ஸன் டயாக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளில் கிடைக்கும் முடிவுகளில் பெரும் வேறுபாடு இருக்கிறது. ஆனால், முதலில் பரிசோதித்தபோது துல்லியமான முடிவுகளைக் கொடுத்தது. அந்த நிறுவனங்களிடமே கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் திருப்பி அனுப்பப்பட உள்ளன. இரு நிறுவனங்களின் பொருட்களும் தரக்குறைவாக இருப்பதால் கேட்பு இரத்து செய்யப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் எந்தவிதமான பணமும் செலுத்தவில்லை. எந்தவிதமான பணமும் முன்கூட்டியே வழங்கப்படவும் இல்லை. இந்திய அரசுக்கு இந்தக் கேட்பை இரத்து செய்ததால், ஒரு ரூபாய்கூட இழப்பு ஏற்படாது. இவ்வாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் ஏமாந்து அதிக விலை கொடுத்து வாங்கபட்டதாக உலாவரும் குற்றச்சாட்டுகளும் தானாகவே தள்ளுபடியாகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



