அரசு நடைமுறைப் படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 549 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ரூ.3.33 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 20,சித்திரை வரை (மே3) நடைமுறையில் இருக்கும். தமிழகத்தில் 144 தடை உத்தரவும் நடைமுறையில் இருக்கிறது. இதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. இதனை மீறி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். கொரோனா நுண்ணுயிரிப் பரவலை தடுக்க சமூக இடைவெளி தேவை என்பது உண்மைதான். ஆனாலும் அதை மேற்கொள்வதற்கு மக்களுக்கு உரிய நிவாரணமும் தேவையாக உள்ளது. காரணம்: சமூகமே தொழிலுக்கும், வணிகத்திற்கும், வருமானத்திற்குமான வாடிக்கையாளராக இருக்கிற நிலையில், உரிய நிவாரணம் இல்லாமல் சமூக இடைவெளியைப் பேணுவது சிக்கலானதாகும். இந்த நிவாரணத்தை மாநில அரசு கொஞ்சம் மளிகைப் பொருட்களோடு ஆயிரம் ரூபாயை நாற்பது நட்களுக்கு சரிகட்ட முயல்கிறது. அதாவது ஒரு நாளைக்கு இருபத்தைந்து ரூபாய். நடுவண் பாஜக அரசோ கைத்தட்டினாலும், விளக்ணைத்தேற்றினாலும் வீடு நிறைந்துவிடும் என்கிற புளுகை அவிழ்த்து விடுகிறது. மக்களோ கொரோனாவை விட வறுமை ஆபத்தானது என்று அஞ்சி, அன்றன்றைக்கு ஒரு நூறு இருநூறுக்காக தனது பைக்கை எடுத்துக் கொண்டு குறு சிறு வணிகத்தில் ஈடுபடுகின்றனர். மிகச் சில போதுகளிலேயே காவலர்களிடம் சிக்கிக் கொள்வதால், மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஈடுபடுகின்ற நிலையில், ஒட்டுமொத்தமாக வழக்கிலும், அபராதத்திலும் சிக்கிக் கொள்கின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 549 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 லட்சத்து 16 ஆயிரத்து 404 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 84 ஆயிரத்து 861 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.3 கோடியே 33 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கடந்த கிழமையிலிருந்து திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



