பள்ளியில் மாணவர்கள் குறைந்து விட்டதாகக் காரணம் காட்டி, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆமதாபாதில் செயல்பட்டு வரும் தமிழ் பள்ளிக்கூடத்தை மூட, கொரோனா நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டுள்ளது குஜராத் அரசு. 08,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மணி நகரில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் வழியில் கற்பிக்கும் மேல்நிலைப் பள்ளி தொடங்கி நடத்தப் பட்டுவருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறைந்ததாகக் கூறி அந்தப் பள்ளியை அம்மாநில அரசு மூடுவதற்கு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாயின. முன்னதாக, மாணவர் சேர்க்கை குறைவு எனக்கூறி அந்த பள்ளி கடந்த மாதம் திடீரென மூடப்பட்டது. அது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.சி. படேல் பிறப்பித்த உத்தரவில், கல்வித்துறை விதிகளின்படி பள்ளியை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 31 பேர் மட்டுமே என்று தெரிய வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வித்துறை கூறியுள்ளது. இந்த விவரம் கொரோனா தொடங்கிய போது கண்டுபிடிக்கப்பட்டு, போதிய மாணவர் சேர்க்கையை அதிகரித்தால் பள்ளி செயல்பட தொடரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பின்னர் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்ததைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், கடந்த மாதம் அவசர அவசரமாக பள்ளி மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில் ஆமதாபாத் தமிழ் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நேரடியாக தலையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்- ஆமதாபாதில் செயல்பட்டு வரும் இந்தத் தமிழ் பள்ளிக்கூடத்தை மூட வேண்டாம் என்றும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கான செலவுகளைத் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஆமதாபாதில் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வரும் பள்ளிக்கூடம், மாணவர்களின் சேர்க்கைக் குறைவு காரணமாக திடீரென மூடப்படுவது குறித்து வருத்தமடைந்தேன். இந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டால் அந்த மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும். தமிழர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். உழைத்துக் கொண்டுமிருக்கிறார்கள். குஜராத்தில் வசிக்கும் தமிழ்ச் சிறுபான்மையினரின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே நீங்கள் (குஜராத் முதல்வர்) தலையிட்டு, அந்தப் பள்ளிக்கூடம் தொடர்ந்து நடக்கச் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிக்கூடத்திற்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது. தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமைகளை குஜராத் அரசு பாதுகாக்குமென நம்புகிறேன்" என அந்தக் கடிதத்தில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், குஜராத் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தை மேற்கோள்காட்டிய அவர், அந்த கோரிக்கையுடன் தாமும் ஒத்துப்போவதாகக் கூறி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று வாசன் கோரியிருக்கிறார். அந்தக் கடிதத்தை ஆமதாபாத் மேற்கு தொகுதி மக்களவை பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் கிரித் சோலங்கியை சந்தித்து அவர் மூலமாக மாநில முதல்வர் விஜய் ரூபானியிடம் வலியுறுத்தும்படியும் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதே பாடுகள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை வலியுறுத்தி தமது கீச்சுப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



