மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சியோனி மாவட்டத்தில் வயிங்கங்கா ஆற்றின் குறுக்கே தலைமைஅமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9 கோடி செலவில் கட்டப்பட்டிருந்த புதிய பாலம் நேற்று ஆற்றோடு போய்விட்டது. 16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜக ஆட்சி நடந்து வரும் மத்தியப்பிரதேச மாநிலத்தில், சியோனி மாவட்டத்தில் வயிங்கங்கா ஆற்றின் குறுக்கே தலைமைஅமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் இன்னும் திறந்து வைக்கப்படவில்லை. திறப்பதற்காக நாள் அறிவிக்கவிருந்தது. இந்நிலையில் ஞாயிறன்று பெய்த மழையால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. முன்னதாக வெள்ளம் பாதித்த ஹோசங்காபாத் மாவட்டத்தில் உள்ள பகுதிகளை ஆளும் பாஜக முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உலங்கு வானூர்தியில் சென்று பார்வையிட்டார். பாலம் இடிந்து விழுந்தது குறித்து இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறியதாவது: கனமழையால் ஆற்றில் நீரின் அளவு உயர்ந்துள்ளது. குப்பைகள் பாலத்தில் சிக்கி கொண்டன. மழைநீரால் அழுத்தம் அதிகரித்து பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் முழுப்பாலமும் இடிந்து விழுந்து ஆற்றோடு போய்விட்டது என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



