நிலுவைத் தொகையை திருப்பி செலுத்தாததால், அனில் அம்பானியின் தலைமையகத்தை, யெஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளது. 16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122 அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், யெஸ் வங்கிக்குச் செலுத்த வேண்டிய, 2,892 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய காரணத்தால், மும்பை சான்டாகுரூசில் இருக்கும் அனில் அம்பானியின் தலைமையகத்தை, யெஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளது. மேலும், தெற்கு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருக்கும், அனில் அம்பானிக்கு சொந்தமான இரண்டு வீடுகளையும், கையகப்படுத்தி உள்ளது. தலைமையகம் மற்றும் வீடுகளை கையகப்படுத்திய விபரத்தை, யெஸ் வங்கி, செய்தித்தாள்கள் மூலம் தெரிவித்து உள்ளது. அனில் திருபாய் அம்பானி குழுமத்தின், கிட்டத்தட்ட அனைத்து முதன்மை நிறுவனங்களும், ‘ரிலையன்ஸ் சென்டர்’ என்று அழைக்கப்படும் சான்டாகுரூஸ் அலுவலகத்துக்கு வெளியே தான், அண்மைக் காலமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, திவால் நடவடிக்கைகள் மற்றும் பங்குகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது, அனில் திருபாய் அம்பானி குழுமம். ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திலிருந்து, 2,892.44 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, அறுபது நாட்களுக்கு முன்பு வசூலிக்க முயன்றதாகவும், அறிவிப்பு வெளியான, 60 நாட்களுக்கு பிறகும், கடனை திருப்பி செலுத்தத் தவறியதால், கடந்த கிழமை மூன்று சொத்துக்களையும் கையகப்படுத்தியதாகவும், யெஸ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 9,ஆனி செவ்வாய் கிழமையன்று (ஜூன்,23) அனில் அம்பானி, ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம், நடப்பு நிதியாண்டில், முற்றிலும் கடன் இல்லாத நிறுவனமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் பாக்கித் தொகைக்காக, தலைமையகத்தையே பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். ஒரே குடும்பம் என்றாலும் சரி. வளர்கின்றவர்களுக்கு மட்டுமே பாஜக மீண்டும் மீண்டும் வளரும் வாய்ப்பு தரும் என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில், அண்ணன் வளர்ந்து கொண்டேயிருக்க தம்பி சறுக்கிக் கொண்டே போவது குறித்து.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



