சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை தமிழ் உள்பட 22 அட்டவணை மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற டெல்லி உயர்அறங்கூற்று மன்ற உத்தரவை மறுத்து- நடுவண் பாஜக அரசு உச்சஅறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிக்கையை தமிழ் உள்பட 22 அட்டவணை மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். என்று உத்தரவிட்டதும், பொதுமக்கள் கருத்து கூற டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் அவகாசம் அளித்ததும் தவறு என உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நடுவண் பாஜக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை நிறுவனங்கள் தயார் செய்தாக வேண்டும். அதை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருந்தால் அனுமதி வழங்கும் இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கும். இந்நிலையில் நாட்டில் சுற்றுச்சூழல் அனுமதி காரணமாக நிலுவையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் நடுவண் பாஜக அரசால் பல்வேறு திருத்தங்கள் செய்து 'சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020” வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையின் படி பொது மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை. இதுபற்றி சுற்றுச்சுழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த புதிய வரைவு வழி வகை செய்யும். இந்தத் திட்டங்களில் சிக்கல்கள் இருந்தால் பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பதிகை செய்தால் போதும் என்றும் இந்த வரைவில் கூறப்பட்டுள்ளது. சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து எந்த அமைப்புகளும் அறங்கூற்றுமன்றங்களுக்குச் செல்ல முடியாது. இந்த வரைவு- சட்டமானால் ஒரு நிறுவனத்தை எதிர்த்து தனி அமைப்போ, தனி நபர்களோ இனி அறங்கூற்றுமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது" என்று சூழலியல் ஆர்வலர்கள் கொதித்தனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதமாக இருப்பதாகவும், நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் பலர் டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்அறங்கூற்றுமன்றம், இந்த வரைவு அறிக்கை பற்றி நாடு முழுவதும் கருத்து கேட்க வேண்டும். இதற்காக வரைவு அறிக்கையை தமிழ் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். மேலும் இதுபற்றி நாளது 27,ஆடி (ஆகஸ்ட் 11) வரை தங்கள் கருத்துக்களை கூற பொதுமக்களுக்கு அரசு அவகாசம் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நடுவண் பாஜக சுற்றுச்சூழல் அமைச்சகம் புதன்கிழமை மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், “இது அரசின் கொள்கை சார்ந்த பாடு ஆகும். இந்த வரைவு அறிக்கையை ஹிந்தி ஆங்கிலம் தவிர்த்து தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது மிக முதன்மையாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற உயர்அறங்கூற்றுமன்றத்தின் உத்தரவையும், அதற்காக வழங்கப்பட்ட அவகாசத்தையும் இரத்து செய்ய வேண்டும். இந்த வரைவில் நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களும் அடங்கியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. (மக்களுக்குத் தெரியாமலும் மற்ற இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்க மாட்டோம் என்பது சூழ்ச்சியன்றி வளர்ச்சியாக எப்படி இருக்க முடியும் என்று உச்சஅறங்கூற்றுமன்றத்தில் விவாதம் முன்வைக்கப்படுமா என்று தெரியவில்லை என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,) இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



