படேல்சிலையில் பார்வையாளர் பகுதி ஒழுகுவதாக மக்கள் புகார் அளித்ததோடு, அந்தக் காணொளியை இணையத்தில் தீயாக்கியும் வரும் நிலையில், ஆம்! மழையை இரசிப்பதற்காகவே அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளது என்று சிலை கண்காணிப்பு அதிகாரிகள் பதில் தெரிவிக்கிறார்கள். 15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகின் மிகப் பெரிய சிலை என்ற பெருமைக்காக குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது சர்தார் வல்லபாய் படேல் சிலை. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்தச் சிலையை தலைமைஅமைச்சர் மோடி, கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்தச் சிலையின் மையப்பகுதியில் பார்வையாளர்கள் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தபடியே நர்மதை ஆற்றையும், குஜராத்தின் அழகையும் பார்த்து ரசிக்கும் படி, அந்த கூடம் அமைக்கப்பட்டுள்ளதாம். ஆனால், தற்போது குஜராத்தில் மழை பெய்து வரும் இந்த மழைக்காலத்தில் பார்வையாளர்கள் கூடம் ஒழுகுகின்ற நிலையில், பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான காணொளியும் இணையத்தில் தீயாகியது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சிலையின் கண்காணிப்பு அதிகாரி ஐ.கே.படேல், மழையை சுற்றுலா பயணிகள் இரசித்து மகிழ்வதற்காக இந்த வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். சர்தார் வல்லபாய் பட்டேல் குஜராத்தில் பிறந்தவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்றார். விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் துணை தலைமை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் சர்தார் வல்லப்பாய் படேல். இந்தியா விடுதலை பெற்ற போது, வெள்ளையர் ஆட்சியின் கீழ் வரி செலுத்தி வந்த மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஐநூற்று அறுபத்தைந்து நாடுகள் விடுதலை பெற்றன. வெள்ளையர்களுக்கு அவர்கள் வரி செலுத்தி வந்ததால், 1.விடுதலை பெற்ற இந்தியாவில் அமைக்க பட்ட இந்திய அரசுக்கு வரி செலுத்தும் நாடாக அமையவும், அப்படி நிலைப்பாட்டை எடுத்த மன்னர்களை இந்தியாவில் அமையப் போகும் அரசின் வலிமை எவ்வாறு இருக்கும் என்று விளக்கி, நீங்கள் இந்தியாவில் அமையப் போகும் அரசுக்கு எதிராக பகையை சம்பாதித்துக் கொண்டு ஆட்சி நடத்தவே முடியாது என்று பயமுறுத்தி பணிய வைத்து, அவர்கள் வைத்த சில பல நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டு அத்தனை மன்னராட்சி பகுதிகளையும் இந்தியாவின் விடுதலை பெற்ற அரசில் இணைத்தவர்தான் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆகவே சர்தார் வல்லபாய் பட்டேலை மிக உயர்ந்த அதிகாரத்தின் குறியீடு என்று சொல்லுவது மிகப் பொருந்தும். ஜம்மு காஷ்மீர் நாட்டை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்களின் நலனைக் குறிப்பிட்டு, கொஞ்சம் கூடுதலான நிபந்தனைகளுடன், ஜம்மு காஷ்மீர் நாட்டை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார். மன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொண்டு, சட்டப் பிரிவு 370-இல் ஜம்மு காஷ்மீர் பகுதிக்கும் மக்களுக்கும் சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே இந்த வகையான சிறப்புத் தகுதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனுபவித்து வந்தாலும் கூட, இந்தியாவின் இராணுவ முற்றுகையும் அந்த மாநிலத்திற்கு மிக அதிகம். ஆனாலும் இந்த மாநிலத்தின் மீதான பொறாமைக் கண்கள் எப்போதும் கண்காணித்தவாறே உள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கும் கூட தற்போது தொடரப்படுகிறது. நடப்பில் இந்தியாவின் மிகப் பெரிய அதிகாரத்தின் குறியீடாக மாற நினைக்கும் மோடி- சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மிக உயர சிலை எழுப்பி, நான் விரும்பும் அதிகாரமும் இவ்வாறானதே என்று மக்களை அச்சுறுத்தும் நோக்கத்திற்கானதா என்கிற கேள்வியும் உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,199.
2.முடியாது; வெள்ளையர் வழங்கிய விடுதலை எங்களுக்குந்தாம் பொருந்தும்; எங்கள் நாடு தனியானது; இந்தியாவில் அமையும் அரசுக்கு நாங்கள் கட்டுபட வேண்டிய தேவையோ, வரி செலுத்த வேண்டிய தேவையோ எதுவும் இல்லை என்றும் சொல்லவும் வாய்ப்பு இருந்தது. பல மன்னர்கள் அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.