வெளியூர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி. இதுவரை வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊருக்குச் சென்றாலும் இன்னும் என்னென்ன துன்பங்கள் காத்திருக்கின்றனவோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வெளி மாநில தொழிலாளர்களைத் தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல அனுமதி வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா நுண்ணுயிரித் தொற்றால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த, மக்கள் விலைகொடுப்பில், துளியும் நிவாரணம் இல்லாமல், 40 நாட்கள் அதிகாரப்பாட்டு ஊரடங்கை நடுவண் அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்து 37 நாட்களும் கடந்து விட்டன. இந்த ஊரடங்கால் வெளியூரில் பணிபுரியும் தொழிலாளர்கள் , கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அண்மையில், வெளியூரில் பணிபுரிந்த ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மும்பையில் திரண்ட நிகழ்வு பரப்பை ஏற்படுத்தியது. வெளிமாநில தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தன. இந்நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காலத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிப்பதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நடுவண் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளியூர்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், படித்துவரும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளை மாநில அரசுகள் அழைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலம் மற்றும் அவர்களின் சொந்த மாநிலம் ஆகியவை அனுமதியளித்தால் மட்டுமே இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்களை உரியமுறையில் தனிமைப்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் எனவும் தொழிலாளர்களைத் திரும்ப அழைத்துக்கொள்வதை கவனிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து மாநில அரசுகள் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் நடுவண் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவண்அரசின் ஊரடங்கு முடிய இன்னும் மூன்று நாட்களே இருக்கிற நிலையில், நடுவண் அரசின் இந்த அனுமதியால், இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்படவிருக்கிறது என்பதை அறிய முடிகின்றது. அப்படியானால் இதுவரை வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊருக்குச் சென்றாலும் இன்னும் என்னென்ன துன்பங்கள் காத்திருக்கின்றனவோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



