தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று இந்திய மருத்துவக் குழுவின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். 17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று இந்திய மருத்துவக் குழுவின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நாற்பது நாள் ஊரடங்கில் இன்னும் மூன்றே நாட்கள் மீதம் இருக்கிற நிலையில், இந்தியாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக கடந்த திங்கள்கிழமை தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த கோரிக்கைகள் வலுத்தன. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து நாளைமறுநாள் தமிழக அமைச்சரவை கூடுகிறது. இதனிடையே 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு இந்திய மருத்துவக் குழுவின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் கூறுகையில் கொரோனா பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் சம அளவு இல்லை. சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த இரு கிழமைகளில் இரட்டிப்பாகியுள்ளது. மேலும் கொரோனா நுண்ணுயிரி உடனடியாக முழுமையாக கட்டுக்குள் வராது. அதனால் தமிழகத்தை பொருத்தவரை ஒரே நேரத்தில் பொது ஊரடங்கை தளர்த்த முடியாது. இங்கு ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும். இதற்காக சில நடைமுறைகளை பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம். தனிமனித இடைவெளி, முகமூடி அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையாக சிகிச்சையை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தொற்று நீண்ட நாட்களாக இருக்கும் என்பதால் நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். சில இடங்களில் ஊரங்கை படிப்படியாக தளர்த்த ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். கடந்த கிழமையில் இருந்து பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு விகிதமும் அதிகரரித்துள்ளது. தனிமைப்படுத்துதல், கண்காணிப்பு போன்றவற்றை செய்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு ஊரடங்கு சரி. ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகுமே? அது கொரோனா பாதிப்பை விட வலிமையானதாக இருக்குமே? அதற்கு என்ன செய்வது என்பது குறித்து அரசுகளுக்கு கவலை எழுவதாகவே தெரியவில்லை. அதிலும் நடுவண் பாஜக அரசு படுபடு கேவலமாக இருப்பதை சமூக வலைதளங்களில் பதிவுகள் வகைவகையாகத் திட்டித் தீர்க்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



