Show all

யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு; மோடி, ஜெட்லி இந்தியப் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டமைக்கு

இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்துவிட்டார்கள் பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் என கடுமையாக தாக்கியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் நிதியமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இந்தியாவின் சிறந்த நிதியமைச்சர்களில் ஒருவராகப் பார்க்கப் படுபவர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இன்று அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், தலைமை அமைச்சர் மோடியும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் எப்படியெல்லாம் இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்துள்ளனர் என்று விரிவாகவே எழுதியுள்ளார்.

‘இந்தியாவில் வறுமை அதன் கடைசி நிலைக்கு வந்துவிட்டது என்கிறார் தலைமை அமைச்சர் மோடி. அந்தப் பொய்யைக் காப்பாற்ற கூடுதல்நேர வேலை பார்க்கிறார் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்டார் அருண் ஜெட்லி. இந்த உண்மையை இப்போதாவது பேசாவிட்டால் தனது தேசியக் கடமையிலிருந்து தவறியவராகிவிடுவார் ஜெட்லி.

விடுதலை இந்தியாவில் பதவி வகித்த வேறு எந்த நிதி அமைச்சரையும் விட அதிர்ஷ்டசாலி அருண் ஜெட்லிதான். வெற்றிப் பெற்ற கையோடு அவருக்கு நான்கு துறைகளை ஒதுக்கிவிட்டார் தலைமை அமைச்சர். அவற்றில் ஒன்றை (பாதுகாப்பு) இப்போதுதான் வேறு ஒருவருக்குக் கொடுத்துள்ளனர் (நிர்மலா சீதாராமன்).

இப்போதும் நிதி உள்ளிட்ட மூன்று துறைகளுக்கு அவர்தான் அமைச்சர். என்னதான் ஜெட்லி ஒரு சூப்பர் மேனாகவே இருந்தாலும் நிதித்துறைக்கு அதிக கவனமும் நேரமும் தேவை.

இந்தியப் பொருளாதாரத்தை வலுவாக கட்டமைக்கக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார் ஜெட்லி. கச்சா எண்ணெய் விலை மிக மந்தமாக இருந்தது ஜெட்லி பதவிக்கு வந்தபோது. அதை சரியாகப் பயன்படுத்தாமல் லட்சக்கணக்கான கோடி ரூபாயை வீணடித்துவிட்டார்.

இந்தியப் பொருளாதாரம் இப்போது தவறான நிலையிலிருந்து மோசமான நிலைக்குப் போய்விட்டது. அதற்கு பணமதிப்பிழப்பு ஒரு முக்கிய காரணம். மோடியின் இந்த தவறான திட்டத்துக்கு அருண் ஜெட்லி முழு உடந்தையாக இருந்திருக்கிறார். சரக்கு மற்றும் சேவை வரி மோசமாக உருவாக்கப்பட்டு, மிகத் தவறாக நடமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதை எல்லாம் சொல்வதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை. காரணம், பாஜகவில் உள்ள பெரும்பான்மையோரின் மன நிலை இது.’

இப்படி எழுதியுள்ளார் யஷ்வந்த் சின்ஹா.

‘தேசத்தின் பொருளாதாரம், நிதி அமைச்சகத்தின் தவறான யுக்திகளால் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. என்று பா.ஜ.க மத்தியில் ஆட்சி செய்தபோது, நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி உடனடியாக பதில் அளிக்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டை, முடிந்தால் தவறென்று நிரூபியுங்கள்!’ என்று தற்போது நடுவண் அரசுக்கு சவால் விட்டிருக்கிறது, சிவ சேனா கட்சி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.