ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக கூறப்படும் 2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டு படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் 10,000 மதிப்பிலான ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிட்டது. ஆனால், இவை முறையே 1946 மற்றும் 1978ம் ஆண்டுகளில் வாபஸ் பெறப்பட்டன. நடுவண் அரசு தற்போது கருப்புப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு கருப்பு பணத்துக்கு வழிவகுக்கும் என்ற கருத்தும் உள்ளது. இந்நிலையில், 2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டு மைசூருவில் உள்ள அச்சகத்தில் அச்சிட்டு தயாராக இருப்பதாகவும், இவை ரிசர்வ் வங்கி விரைவில் புழக்கத்துக்கு வெளியிடும் என்றும் கடந்த மாதம் தகவல் வெளியானது. இதற்கிடையில், ரூ.2,000 நோட்டு இதுதான் என குறிப்பிட்டு, ரூபாய் நோட்டு படம் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக உலவி வருகிறது. இதில் காந்தி படம் இல்லை என்றும் தகவல் பரவியுள்ளது. ஆனால், ஒரு நோட்டில் காந்தி கண்ணாடி இருப்பது தெரிகிறது. இதுதான் ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நோட்டா என்பது தெரியவில்லை. ரிசர்வ் வங்கி தரப்பிலும் ரூபாய் நோட்டு மாதிரி பற்றி உறுதிப்படுத்தவில்லை. இந்த நோட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



