கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து அகவை பெண்களையும் அனுமதிக்க தயாராக இருப்பதாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு திருவாங்கூர் தேவசம் வாரியம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆட்சி மாறும் போதெல்லாம் அரசு தனது வசதிக்கேற்ப நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது ஏற்கக்கூடியது அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அனைத்து அகவைப் பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கக் கோரி இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், 10 அகவை முதல் 50 அகவைக்குட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இந்தத் தடையை நீக்கி அனைத்துப் பெண்களும் கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும். எனக் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுப்பது ஏன்? அரசமைப்பு சட்டத்துக்கு மாறாக கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தது. இந்நிலையில், சபரிமலை கோயில் பிரச்சினையில் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமை கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 2007 நவம்பர் மாதத்தில் அப்போதைய இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு எடுத்த நிலைப்பாடான சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது என்பதை தாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். எனத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து திருவாங்கூர் தேவசம் வாரியம் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றுமாறு மேல்முறையீடு செய்துள்ளது. பின்னர் இந்த வழக்கு வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கேரளாவில் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு சபரிமலையில் அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்க அறிக்கையில், திருவாங்கூர்-கொச்சி இந்து சமய அமைப்புகள் சட்டம் 1950-ன்படி, ஐயப்பன் கோயில் நிர்வாகத்தை திருவாங்கூர் தேவசம் வாரியம் கவனித்து வருகிறது. இந்த சட்டத்தின்படி, ஐயப்பன் கோயிலின் வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. கோயிலுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து வாரியமே முடிவு எடுக்கும். எனவே, மத நம்பிக்கை தொடர்பான இந்த விவகாரத்தில் அந்த வாரிய மதகுருக்களின் முடிவே இறுதியானது. எனக் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



