Show all

தும்பை விட்டு நடுவண் பாஜக அரசின் வாலைப்பிடித்துக் கொண்டு ஓடி வரும் தமிழ்நாடு! ரூ.16,331 ஆயிரம்கோடி சரக்கு சேவைவரி நிலுவையில்

தமிழகத்திற்கு நடுவண் பாஜக அரசு கொடுக்க வேண்டிய ரூ.16,331 ஆயிரம் கோடி சரக்கு சேவைவரி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று சரக்கு சேவை வரி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாற்பத்தி ஒன்றாவது  சரக்கு மற்றும் சேவை வரி மன்றக் கூட்டம் நேற்று காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். கூடுதல் தலைமைச் செயலாளர், நிதி மற்றும் முதன்மைச் செயலாளர் மற்றும் வணிகவரி ஆணையரும் கலந்து கொண்டனர்.

நேற்றைய கூட்டம் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு குறித்து விவாதிக்கப்படுவதற்கென மட்டுமே கூட்டப்பட்டிருந்தது. 2018-2019 ஆம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு நடுவண் அரசால் வழங்கப்பட வேண்டிய நிலுவையாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையான ரூ.553.01 கோடி, 2019-2020 ஆம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையான ரூ.246.56 கோடி மற்றும் 2020-2021 ஆம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையான ரூ.11,459.37 கோடி, ஆக மொத்தம் ரூ.12,258.94 கோடியினை நடுவண் அரசு விரைந்து வழங்கிட வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் நேற்றைய கூட்டத்தில் வலியுறுத்தினார்.

மேலும், 2017-2018 ஆம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய சரக்கு சேவைவரி நிலுவைத் தொகையான ரூ.4073 கோடியினையும் விரைந்து வழங்கிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் வரிவாங்கும் உரிமையை முற்றாக நடுவண் பாஜக அரசு எடுத்துக் கொண்டு, மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பினை நடுவண் அரசு ஈடுசெய்ய 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டமானது நடுவண் அரசால் இயற்றப்பட்டது.

முன்பு, மாநிலங்களில் நடக்கும் வணிகத்திற்கு மாநிலவரி மட்டும் இருந்தது. மாநிலம் விட்டு மாநிலம் நடக்கும் வணிகத்திற்கு மட்டுமே நடுவண் அரசு வரி இருந்தது. அந்த வரியையும் மாநிலங்கள் வசூலித்து நடுவண் அரசுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன.

நடுவண் பாஜக அரசு கொண்டு வந்த சரக்கு சேவை வரி சட்டத்தால் மாநிலங்களுக்கு வணிகவரி வாங்கும் உரிமையில்லை. மாநிலங்களுக்குள் நடக்கும் வணிகத்திற்கும் நடுவண் அரசு வரி வாங்குகிறது. 

இந்த நிலையில் மாநில வணிகவரி வருமானம் நடுவண் அரசுக்கு சென்று திரும்பும் தேவையற்ற இழுத்தடிப்பு நிருவாகம் கூடுதல் ஆக்கப்பட்டிருக்கிறது. அந்த இழுத்தடிப்பை மாநிலங்கள் குறைபட்டுக் கொள்ள இப்போது நடந்திருப்பது 41வது கூட்டம். வணிக வரி வருமானத்தில்- தும்பை விட்டு நடுவண் பாஜக அரசின் வாலைப்பிடித்துக் கொண்டு ஓடி வருவதற்கு வாய்ப்பாக அமைக்கப் பட்டதுதான் சரக்குசேவை வரி. அந்த நோக்கம் செவ்வனே நடைந்தேறி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.