Show all

இப்ப இல்லைன்னா இனி எப்பவும் இல்ல! என்பதால்தான் நீட்டை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது நடுவண் பாஜகஅரசு

இந்த முறை நீட் தேர்வு நடத்தப்படா விட்டால், இனி இந்தியாவில் நீட் என்கிற தேர்வே இல்லாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதியோ உறுதி.

11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் அரசின் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் கூட்டு நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) மூலமாக தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தக் கல்லூரிகளுக்கு இடையே, கல்வித் தரத்திலோ கட்டணத்திலோ பெரிய ஏற்றதாழ்வு இருக்காது. சொந்த ஊருக்கு அருகாமையில், தொலைவில் என்பது மட்டுமே மாறுபடும். மேல்தட்டு மக்கள் மட்டுமே மோதுவார்கள். இலக்கு வைத்த மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைத்துவிடும். கீழ்த்தட்டு மாணவர்கள் களத்திற்கே வரமாட்டார்கள். 

இப்படியான பொறியியல் நுழைவுத் தேர்வு நடத்துவது நடுவண் பாஜக அரசுக்கு முதன்மையான நோக்கம் எல்லாம் கிடையாது. நீட் தேர்வுக்கு சப்பைக்கட்டுதான் இது. நீட் தேர்வு நடத்துவதுதான் முதன்மையான நோக்கம். ஏனென்றால் நீட் தேர்வில்தான் தமிழக மருத்துக்கல்லூரிகளின் இடங்களைப் பிடுங்கி வடமாநில மாணவர்களுக்குத் தாரைவார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, நடுவண் பாஜக அரசு நீட் என்கிற ஒரு தேர்வை திணிப்பதற்கு முன்பு வரை பொறியியல்  கல்லூரிகளுக்குப் பின்பற்றும் அதே முறையை சிக்கல் ஏதும் இல்லாத வகையில் ஏழைகளுக்கு கோயிலாகவும், பணக்காரர்களுக்கும் மருத்துவ வாய்ப்பாகவும் முன்னெடுக்கப் பட்டு வந்தன. 

நடுவண் பாஜக அரசின் நீட்டுக்குப்பிறகே அனிதா போன்ற ஏழைகளின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு மரணத்தில் முடிந்தது. 

இதனால்- நீட் தேர்வை நடுவண் பாஜக அரசு முன்னெடுக்கும் நோக்கத்தை தமிழகம் நூறு விழுக்காடும் புரிந்து கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு காவடி தூக்கும் அதிமுக ஆட்சியிலேயே கொரோனாவைக் காரணம் காட்டி, நீட்டை நடத்தாமல் விட்டுவிட்டால், அடுத்து தமிழகத்தில் மலரப்போகும் திமுக ஆட்சி இதையே முன்மாதிரியாக வைத்து நீட்டுக்கு சாவு மணி அடித்துவிடும். அப்புறம் நீட்டை அறங்கூற்று மன்றத்தால் கூட காப்பாற்ற முடியாது. 

நீட் என்பது முழுக்க முழுக்க தமிழகத்தின் மருத்துவ இடங்களை பிடுங்குவதற்காகவே என்கிற நிலையில் தமிழகத்திலேயே நடத்தப்படாத நீட் ஒட்டு மொத்த இந்தியாவிற்கு தேவையேயில்லை என்று ஆகி விடும். அதனாலேயே எப்படியாவது நீட்டை நடத்திவிட நடுவண் பாஜக அரசு சாம பேத தான தண்டம் என்கிற அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த முறை நீட் தேர்வு நடத்தப்படா விட்டால் இனி இந்தியாவில் நீட் என்கிற தேர்வே இல்லாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதியோ உறுதி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.