26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல இதழியலாளராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, தற்போது மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் என பொறுப்பில் இருக்கும், எம்.ஜே.அக்பர் பாலியல் வக்கிர உணர்வுடையவர் என்பதாக, அவர் இதழியலாளராக இருந்த காலத்தில் அவரால் தங்களுக்கு நேர்ந்த மன உளைச்சல் மற்றும் அவலங்கள் குறித்து, அவர்மீது பெண் இதழியலாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக நடுவண் அரசு அமைதியாக இருப்பது ஏன்? அவர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது பதவி விலகிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே நடுவண் அரசில் பெண் அமைச்சர்களாக இருக்கும் சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோரை, பேட்டியெடுக்க தொடங்கி விட்டார்கள் இதழியலாளர்கள். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டனர், சுஷ்மா சுவராஜ் மற்றும் நிர்மலா சீதாராமன். மேனகா காந்தி மட்டும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வெளிநாட்டு பயணத்தில் உள்ள எம்.ஜே. அக்பர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பத்திரிக்கைகள் அனுப்பிய கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை. இதற்கிடையே எம்.ஜே.அக்பரை பதவியை ராஜினாமா செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் வெளிப்படையாக கருத்தை பதிவு செய்துள்ள நடுவண் அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இதழியலாளர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடுவண் அமைச்சர் எம்.ஜே. அக்பர்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனென்றால் சம்பவம் நடைபெற்ற போது நான் அங்கு கிடையாது என்று கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.