பிரின்ஸ் சாந்தகுமார், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்! 02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகளவில் பல்வேறு கிளைகளைப் பரப்பியிருக்கும் சரவண பவன் உணவக உரிமையாளர் இராஜகோபால், பிரின்ஸ் சாந்தகுமாரைப் படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறங்கூற்றுமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். சரவண பவன் உணவக உரிமையாளர் இராஜகோபாலுக்கு 2 மனைவிகள் இருந்தபோதிலும் மூன்றாவதாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஜிவஜோதி, தனது குடும்பத்தாரின் நிர்பந்தத்தைத் தாண்டி தான் விரும்பிய பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தகராறில் இராஜகோபால் மற்றும் அவரது கும்பலால் பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட்டார். வழக்கு விசாரணையின் முடிவில், 15 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தை நாடினார் ராஜகோபால். உயர்அறங்கூற்றுமன்றமோ 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிப்பதாக அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச அறங்கூற்றுமன்றம் சென்றார் ராஜகோபால். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும் அறங்கூற்றுவர்கள் உத்தரவின் அடிப்படையில் பத்து நாட்களுக்கு முன்பே இராஜகோபால் சரணடைந்திருக்க வேண்டும் ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டிச் சரணடைவதில் சிக்கல் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும், அவர் சரணடைய வேண்டும் என்பதை உறுதிப்படத் தெரிவித்தது அறங்கூற்றுமன்றம். செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்தான் அவரது உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகவும் அவரைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் அறங்கூற்றுமன்றத்தில் அவரது தரப்பில் மனு பதிகை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தனர். நேற்று அவர் வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, முதலாவது தமிழ்த் தீர்ப்பாக சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் தீர்ப்பை உச்சஅறங்கூற்றுமன்றம் தமிழில் வெளியிட்டுள்ளது. இதை அவர் படித்து பார்க்காமலேயே உயிரிழந்துவிட்டார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,217.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



