24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முறையான திட்டமிடல் மற்றும் தேர்வு நடத்துவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் வெளியிடப்பட்டுள்ள நீட் தொடர்பான அறிவிப்புகள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் எனவும், எழுத்து தேர்வாக இல்லாமல் கணினி தேர்வாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் தெளிவான திட்டம் இல்லை என்பதையே இந்த அறிவிப்பு காட்டுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சேர்க்கை எப்போது நடக்கும் யார் தகுதியானவர்கள் என எந்த தகவலும் அளிக்கப்படடவில்லை. ஏற்றத்தாழ்வு உள்ள சமூகத்தில் கணினி வாயிலாக தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறுகிறார். நீட் தேர்வில் ஏற்கனவே பல குளறுபடிகள் உள்ள நிலையில், எட்டு அமர்வுகளில் தேர்வு நடத்தினால் எப்படி நாடு முழுவதும் ஒரே தரவரிசை பட்டியலை வெளியிட முடியும் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அதிகமான அமர்வுகளில் நடத்தப்படும் தேர்வு, அது நடத்தும் அமைப்புகளுக்கு தான் லாபத்தை கொடுக்கும் எனவும், இது மாணவர்களின் நலன் கருதி அறிவிக்கப்படவில்லை என்று சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறுகிறார். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் நீட் தேர்விற்கு எதிரான நிலைபாட்டில் இருக்கும் நிலையில், அவற்றை பொருட்படுத்தாமல் அடுத்ததடுத்த அறிவிப்புகளை நடுவண் அரசு வெளியிட்டு வருவது ஏற்கதக்கதல்ல. இது சமூக நீதிக்கும், பொருளாதாரத்தில் பிந்தங்கிய மாணவர்களுக்கும் எதிரானது என்றும் கல்வியாளர் நலங்கிள்ளி கூறுகிறார். நீட் தேர்வில் மாநில பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என ஆண்மையில் தமிழகம் வந்த போது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இதுதொடர்பான விளக்கமான பதில் எதுவும் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வியில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் அடங்கி இருப்பதால், திட்டவட்டமான தெளிவான அறிவிப்புகளாக இல்லாமல் இருப்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,842.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



