Show all

பாதிக்குமா 8வழிசாலையை! வனம் - சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு நிபந்தனைகள்

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசு, தமிழக அரசு அதிகாரிகள் மூலம் செயல்படுத்த முனையும், சேலம் - சென்னை எண்வழிச்சாலைக்கு, பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து நடுவண் அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு, நடுவண் அரசின் வனம் - சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது சம்பந்தமாக திட்டத்தின் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டு இயக்குனர் ரகு குமார் கோடாலி சென்னை கிண்டியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை-சேலம் 277 கி.மீ. தூர பசுமை வழி சாலைக்கு வனம் -சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தொடர்பான முழு அறிக்கையை பதிகை செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வனம் - சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் மேற் கொள்ளப்படும்.

மேலும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். பொதுமக்கள் எந்த வகையில் பிரச்சினைகள் எழுப்புகிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்.

மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாக திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அறிக்கை பதிகை செய்து அதனை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் இடையே 277 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற நடுவண் அரசு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் முடிவு செய்துள்ளது.

தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் தொடங்கும் இந்தச் சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருட்டிணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக சேலம் புறநகர் பகுதி வழியாக சென்று இணைகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்ராயன் மலை, சேலம்-தர்மபுரியில் சேர்வராயன் மலைப்பகுதியில் இந்த சாலை செல்கிறது. இந்த சாலைக்காக 5 மாவட்டங்களிலும் வேளாண் நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்படுகின்றன.

இந்தச் சாலையில் வனப்பகுதி பாதிக்கப்படும், ஏராளமான மரங்களும் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலங்கள் கையகப்படுத்தப் படுவதால் இயற்கை வேளாண்மையும் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆங்காங்கே உழவர்களும், சமூக ஆர்வலர்களும், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நிலம் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

அரசியல் கட்சிகளும் எண்வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 8 வழி வழிச்சாலை திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறுகையில், எண் வழிச்சாலை திட்டத்துக்கு பதிலாக அந்த நிதியை கொண்டு ஏற்கனவே உள்ள சாலைகளை விரிவுப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்றார்.

ஏற்கனவே சென்னை - பெங்களூர் இடையே 265 கி.மீ. தூர விரைவுச் சாலை திட்டத்தை நிறைவேற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருந்தது. இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் கர்நாடகத்தில் பொது மக்கள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் நிறைவேற்ற முடியாமல் நிற்கிறது.

இதற்கு பதிலாகத்தான் சென்னை-சேலம் எண் வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை-சேலம் எண் வழிச்சாலை நிறைவேற்றப்பட்ட பின்பு 2-வது கட்டமாக கோவை வரை செயல்படுத்தப்படும். அதன்பிறகு கேரள மாநிலம் கொச்சி வரை நீடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடுவண் அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு, நடுவண் அரசின் வனம் - சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு உத்தரவு எண் வழிச்சாலை திட்டத்தை தடை படுத்தாது. நெடுஞ்சாலைத் துறை எளிமையாக கடந்து செல்லும் என்றே நம்பப் படுகிறது. 

நடுவண் அரசு இந்தத் திட்டத்தை, தமிழக அரசை நெருக்கி, தமிழக அரசு அதிகாரிகள் மூலம் செயல்படுத்த முன்;யோசனையுடன் முனைவதால், நடுவண் அரசின் மற்ற திட்டங்கள் போல் அல்லாமல் இந்த திட்டத்தில் நடுவண் அரசுக்கு தமிழக அரசின் மீதான நெருக்குதலும், தமிழக ஆட்சிப் பணித்துறை, வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகளின் சாம, பேத, தான, தண்ட முயற்சியால் எல்லா எதிர்ப்புகளும் தவிடு பொடியாக்கப் பட்டு வெற்றி ஈட்டித் தரப்படும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,828. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.