10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில், துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர்களை பச்சை படுகொலை நிகழ்த்தி ஒரு மாதத்துக்குப் பிறகும் கூட தூத்துக்குடி மக்களிடம் அச்ச உணர்வு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆண்கள் பலர் ஊரை விட்டுச் சென்று வெளிமாவட்டங்களில் தலைமறைவாக வாழ்வதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகிறார்கள். போராட்டம் நடத்திய மக்கள் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகவும், கலவரத்திற்கு கரணமாக இருந்ததாகவும், சட்டத்திற்கு புறம்பாக அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தொடரும நிகழ்வாக இருக்கிறது. இதுவரை 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 248 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மதுரை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த வாஞ்சிநாதனை நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேராடியதாக சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கலவரம் நடந்து ஒரு மாத காலம் ஆகியும் இன்றும் தூத்துக்குடி மக்களிடம் அச்ச உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது. அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதனை சுற்றியுள்ள குமரட்டியபுரம், பண்டாரம்பட்டி, மடத்தூர், அண்ணாநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராடி வந்தனர். ஆனால் ஆலையை மூடிய பின்பும் கிராமங்களுக்கு இரவில் செல்லும் காவல்துறையினர் பொதுமக்களின் வீடுகளில் கதவைத் தட்டி வீட்டில் உள்ள ஆண்களை கைது செய்து வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் மடத்தூர் கிராம மக்கள் தங்களது குடும்பத்தினருடன் ஊர் நடுவே உள்ள கோயிலில் இரவு நேரங்களில் தங்கியிருக்கிறார்கள். தற்போது வரை எங்களால் சுதந்திரமாக ஊடங்களிடம் கூட பேச முடியவில்லை. ஊடகங்களிடம் பேசினால் இரவு நேரங்களில் காவல்துறையினர் வீடுகளில் வந்து மிரட்டுகிறார்கள். ஊடகங்களை சந்திக்கக் கூடாது எனவும் எச்சரித்து வருகிறார்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவருமே வெளி மாவட்டங்களில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக ஊர் பெண்கள் தெரிவித்தனர். தூத்துக்குடியில் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இரவு நேரங்களில் பொதுமக்களை வீடுகளுக்குள் புகுந்து காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர். அரசு தரப்பில் தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்று சொல்வது வெறும் கண் துடைப்புதான். இன்றும் இயல்பு நிலைக்கு திரும்பாமல்தான் உள்ளது. போரட்டத்தில் கலந்து கொள்ளாத சிறுவர்களை எல்லாம் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர் இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது என பெண் வழக்கறிஞர் சுமித்ரா தெரிவித்தார். மடத்தூர் கிராமத்தின் தெருக்கள் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளன முதலில் பொதுமக்களை மட்டுமே கைது செய்து வந்த காவல்துறையினர் தற்போது வழக்கறிஞர்களையும் கைது செய்யத் தொடங்கிவிட்டனர். காரணம் வழக்றிஞர்களையே கைது செய்தால் இனி யார் எதை கேட்க முடியும் என்ற எண்ணத்துடன்தான் இதனை அரசு செய்து வருவதாக தெரிகிறது. நடப்பதையெல்லாம் பார்த்தால் இலங்கையில் எப்படி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டதோ அதே போல்தான் தூத்துக்குடியில் நடக்கிறது என சத்தியா தெரிவித்தார். வாஞ்சிநாதன் கைது சட்டத்திற்கு புறம்பானது, அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளுமே திரும்பப் பெற வேண்டும் என தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் தீபக் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,828.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



