Show all

சென்னை அறங்கூற்றுமன்றம் கேள்வி! தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஆதார் மூலம் வாக்காளர்கள் செல்பேசி எண்களை எடுத்து பாஜக புலனக்குழுக்கள் அமைத்துக் கருத்துப்பரப்புதல் செய்து வருவது குறித்து அறங்கூற்றுமன்றதில் வழக்கு. தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர், அறங்கூற்றுவர்கள்.

12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: புதுச்சேரியில், புலனத்தில் (வாட்ஸ்ஆப்) குழு தொடங்கி, கருத்துப்பரப்புதல் செய்யும் பாஜகவுக்கு எதிரான புகாருக்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்பேசி எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, புலனக்குழுக்கள் தொடங்கி பாஜகவினர் தேர்தல் கருத்துப்பரப்புதல் செய்து வருகின்றனர். இதற்குத் தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு, சென்னை உயர் அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் சஞ்சீவ் பானர்ஜி, அறங்கூற்றுவர் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அறங்கூற்றுவர்கள், ‘அரசியல் கட்சிக்கு எப்படி வாக்காளர்களின் செல்பேசி எண்கள் கிடைத்தன? அந்த செல்பேசி எண்களை அரசியல் கட்சி எப்படி பயன்படுத்தலாம்’ என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அரசியல் கட்சியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த அறங்கூற்றுவர்கள், ‘இதுபோன்ற அத்துமீறல்களில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதோடு, இந்த வழக்குக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் விரிவான பதிலை தெரிவிக்க வேண்டும்’ எனவும் அறங்கூற்றுவர்கள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.