Show all

விநாயகர் சதுர்த்திக்கு வீம்பு பிடிப்பது அரசியலா- மெய்யியலா!

பாஜகவின் ஒரேநாடு ஒரே ஆதிக்க இனக் கோட்பாட்டின் அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரியவிழாக்கள் பெருவாரியாக இந்தியாவெங்கும் புகுத்தப்பெற்று காலத்திற்கு காலம் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அப்படிப் பட்ட விழாக்களில் ஒன்றுதான் இந்த விநாயகர் சதுர்த்தி விழா. 

05,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சமுதாயம் விழாமல் இருப்பதற்கு விழா என்பதாக ஆண்டுக்கு நான்கு விழாக்களை காலங்காலமாகக் கொண்டாடி வருகிறது தமிழகம். அந்த நான்கு விழாக்களில் தலையாயது தைபிறந்தால் வழிபிறக்கும் என்கிற அறுவடைக்குப் பிந்தைய பொங்கல் விழாவாகும். மற்ற மூன்று விழாக்கள் சித்திரையில் புத்தாண்டு, ஆடியில் நீர்ப்பெருக்கு விழா, கார்த்திகையில் விளக்கேற்றுத் திருவிழா ஆகியனவாகும்.

தமிழர்களோடு வந்து கலந்த ஆரியர், அராபியர், ஐரோப்பியர்களால் பல விழாக்களை ஏற்று கொண்டாடும் வழக்கத்தையும் தமிழர்கள் நடைமுறையில் கொண்டுள்ளனர். அந்த வகையில் ஐரோப்பியர்களின் தொடர்பால் கிறித்துமஸ், அராபியர்களின் தொடர்பால் இரம்சான், ஆரியர்களின் தொடர்பால் தீபாவளி ஆகிய விழாக்கள் தமிழ்; மக்களாக விரும்பி ஏற்று கொண்டாடப்பட்டு வருகின்றன. 

பாஜகவின் ஒரேநாடு ஒரே ஆதிக்க இனக் கோட்பாட்டின் அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரியவிழாக்கள் பெருவாரியாக இந்தியாவெங்கும் புகுத்தப்பெற்று காலத்திற்கு காலம் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அப்படிப் பட்ட விழாக்களில் ஒன்றுதான் இந்த விநாயகர் சதுர்த்தி விழா. 

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த விழாவிற்கு தமிழகத்தில் அவ்வளவு பெரிய அறிமுகம் இல்லை. தொடக்கத்தில் பிள்ளையார் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்பதாக மட்டும் இருந்தது. அண்மைக்காலமாகத்தான் இந்த விநாயகர் சிலை நிறுவுதல், விநாயகர் சிலை ஊர்வலம், ஆற்றில் கரைத்தல் என்கிற பார்ப்பனிய கலாச்சாரம் விரிவாக தமிழகத்தில் மெய்யியல் போர்வையில் பாஜகவின் ஒரேநாடு ஒரே ஆதிக்க இனக் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசியல் அரங்கேற்றமானது

அந்த அரசியல் காரணம் பற்றியே- கொரோனா காலமாக இருந்தாலும், விநாயகர் சதுர்த்தியை வழக்கம்போல் கொண்டாடியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்துவருகின்றன ஹிந்து அமைப்புகள். கொரோனா பரவலுக்கு ஒருவகையில் வாய்ப்பாக கருதப்படும் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி ஏன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை இந்த அமைப்புகள் என்ற கேள்வி பொதுமக்கள் நடுவே பேச்சு எழுந்துள்ளது.
 
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும்- பொது இடங்களில் பேரளவான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடவும், விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் பாஜகவின் ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், தற்போது கொரோனா காலமாக உள்ளதால், பொது வழிப்பாட்டுக்கோ, ஊர்வலங்களுக்கோ அனுமதி அளிக்க இயலாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதையடுத்து விநாயகர் சதுர்த்தியை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட அனுமதிக்கக் கோரி, சென்னை உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை விசாரித்த அறங்கூற்று மன்றம் மாநிலத்தில் நாள்தோறும் சராசரியாக 6,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுவரும் சூழலில், விநாயகர் ஊர்வலம் தேவைதானா என கேள்வியெழுப்பியதுடன், இந்த பாட்டில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கறாராக சொல்லிவிட்டது.

ஆனால், அரசு உத்தரவிட்டாலும் சரி, அறங்கூற்றுமன்றம் என்ன சொன்னாலும் சரி, விநாயகர் சதுர்த்தியை அண்மைக் காலமாக திணித்துவிட்ட நடைமுறையில் கொண்டாடியே தீருவோம் என்பதில் ஹிந்து அமைப்புகள் பிடிவாதம் காட்டி வருகின்றன.

அத்துடன், தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் பரவாத கொரோனா, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதால் பரவிடுமா என்றும் ஹெச்.இராஜா போன்றவர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்கள் மட்டுமே செல்கின்றனர். ஆனால், சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் விநாயகரை நிறுவினால் அதனை அனைத்து தரப்பு அகவையினரும் கொண்டாடத்தாம் செய்வார்கள். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதை இவர்கள் அறிவார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

மேலும், டாஸ்மாக் கடைகளை கைகாட்டி, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி கேட்கும் ஹிந்து அமைப்பினர், கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள டாஸ்மாக்கை மூட சொல்லி, அரசுக்கு எதிராக ஏன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

இதேபோன்று, தென்மாவட்டங்களில் மிகவும் பேரறிமுகமான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நிகழ்வு, ஆடி தபசு என எந்தவொரு விழாவும், கொரோனா காரணமாக இந்தமுறை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை. அந்த விழாக்களுக்கெல்லாம் குரல் கொடுக்காத ஹிந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் ஏன் வீம்பு பிடிக்கின்றன என்ற பாஜகவின் அரசியலை இணையம் தோலுரித்துக் காட்டி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.