கூகுள் தேடுதளத்தில் கடந்த மாதத்தில் இந்தியர்கள் அதிகம் எதை தேடினார்கள் என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனாவையும் தாண்டி அப்படி என்ன தேடியிருப்பார்கள்- பார்க்கலாமா? 21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கூகுள் தேடுதளத்தில் கடந்த மாதத்தில் இந்தியர்கள் அதிகம் எதை தேடினார்கள் என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தில் மாதந்தோறும் அதிகம் தேடப்படுவன குறித்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். வழக்கம் போல இந்தியத் தேடலில் முதலிடம் பெற்றது கொரோனாதாம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த நிலையில் ஹிந்தி திரையுலக நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவரங்கள், மரணத்திற்கான காரணம் குறித்த தேடல்களே என்று கூகுள் இந்தியத் தேடல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி திரையுலக நடிகரான சுஷாந்த் சிங் துடுப்பாட்ட வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பேரறிமுகமானவர். 34 அகவையே கடந்த இவரது தற்கொலை செய்தி நிறுவனங்களால் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. அதுகுறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதத்திற்கான கூகுள் தேடலில் கொரோனாவை அடுத்து தலைப்பாகி இருக்கிறது. கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கொரோனை தேடலானது முந்தைய மாதத்தை விட கடந்த மாதம் 66 விழுக்காடு குறைந்திருக்கிறது என தெரிகிறது. கொரோனா தாக்கம் தொடர்பான செய்திகள், தடுப்பூசி குறித்த செய்திகள் அதிகரித்து வருகிறது. இதில் பதஞ்சலி மருந்து, உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு போன்றவைகள் இடம்பெற்றுள்ளன. கூகுள் அறிவிப்பின்படி கடந்த மாதம் தேடப்பட்ட கொரோனா நோய்த் தொற்று குறித்த கேள்விகள்: கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க எந்த முகமூடி சிறந்தது? நியூசிலாந்து கொரோனாவை எப்படி தடுத்தது? கொரோனா பலவீனமடைகிறதா? போன்ற கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தன. கொரோனா பரவல் தொடர்பாக அதிகம் தேடப்பட்ட மாநிலங்களில் கோவா முதல் இடத்தையும் டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன. கொரோனா தொடர்பான செய்திகள், சுஷாந்த் சிங் மரணம், ஞாயிற்று மறைப்பு மற்றும் தந்தையர் பன்னாட்டு நாள் ஆகியன கடந்த மாதம் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகள் ஆகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



