ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் வரி உயர்த்தல் மூலம் ஒன்றிய அரசுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் 300விழுக்காடு வருமானம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு மக்களவையில் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டுள்ளது. அதுசரி… எங்கே போகிறது இந்தக் காசெல்லாம் என்பதே நமது கேள்வி. 10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: பெட்ரோல், டீசல் மீது ஒன்றிய பாஜக அரசு உயர்த்திய வரியால் ஒன்றிய அரசுக்கு இந்தவகையில் கிடைத்த வருமானம் கடந்த ஆறு ஆண்டுகளில் 300 விழுக்காடு அதிகரித்துள்ளது என ஒன்றிய அரசு மக்களவையில் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீதான வரி வசூல் மூலமாக ஒன்றிய அரசுக்கு ஆறு அண்டுகளுக்கு முன்பு ரூ.74,158 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில், நடப்பு பாஜக அரசின் வரி உயர்த்தல் மூலம் இந்த வகையிலான வரி வசூல் ரூ.2.95 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.3.56 உற்பத்தி வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒன்றிய பாஜக அரசு அதை ரூ.32.90 அதிகரித்துள்ளது. அதேபோன்று டீசல் மீதான கலால் வரியும் ரூ.3.56 லிருந்து ரூ.31.80 ஆக உயர்த்திக் கொண்டுள்ளதாக அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி ஒன்றிய ஆட்சியில் முதல் முறையாக பொறுப்பேற்ற போது பெட்ரோல் மீதான கலால் வரி மூலமான வருமானம் ரூ.29,279 கோடியும், டீசல் மீதான கலால் வரி மூலமான வருமானம் ரூ.42,881 கோடியும் ஒன்றிய அரசுக்கு கிடைத்தது. இந்த நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் பலமுறை கலால் வரி உயர்த்தப்பட்டதன் விளைவாக தற்போது அந்த வருவாய் 300 விழுக்காடு உயர்த்திக் கொண்டதாக ஒன்றிய பாஜக அரசு மக்களவையில் ஒப்புக் கொண்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.