12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த பொதுத்தேர்தலில் மோடி வாக்குறுதி அளித்தது போல், கறுப்புப்பணத்தை மீட்டால், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனுவுக்குப் பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலின்போது, மோடி தனது தேர்தல் கருத்துப்; பரப்புதலில், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டுவந்து, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் வைப்பு செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறவைத்தனர். அதன்பின் கறுப்புப்பண ஒழிப்பில் தீவிரமாக ஈடுபடுவதாக, மோடி தலைமையிலான அரசு- பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தது. இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. நாட்டில் கறுப்புப்பணத்தை ஒழிக்கவும், ஊழல், கள்ளரூபாய் தாள்களை ஒழிக்கவும் இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டதாக மோடி அறிவித்தார். இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 18 நாட்களுக்குப் பின் மோகன் குமார் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் பதிகை செய்தார். அதில், தலைமை அமைச்சர் மோடி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கறுப்புப்பணத்தை ஒழித்துவிட்டால், அதில் இருந்து ரூ.15 லட்சத்தை மக்களின் வங்கிக்கணக்கில் சேர்ப்பேன் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது கறுப்புப்பணம் ஒழிப்பு நடந்துவருகிறது. எப்போது அந்த பணம் மக்களின் வங்கிக்கணக்கில் வைப்பு செய்யப்படும் என்று கேட்டிருந்தார். இந்த மனு பிரதமர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது. அந்த மனுவுக்கு தலைமை அமைச்சர் அலுவலகம், ரிசர்வ் வங்கி ஆகியவை முறையான விளக்கம் அளிக்கவில்லை. அது குறித்து மனுதாரர் சர்மா, தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்துரிடம் புகார் அளித்தார். அந்தப் புகார் தொடர்பான விசாரணை தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் முன்னிலையில் அண்மையில் நடந்தது. அப்போது, தலைமை அமைச்சர் அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தலைமை அமைச்சர் மோடி தேர்தல் கருத்துப் பரப்புதலின் போது அறிவித்த கறுப்புப்பணத்தை மீட்டால் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் வைப்பு செய்யப்படும் என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் 'தகவல்' என்ற அம்சத்தின் கீழ் வராது. அதுமட்டுமல்லாமல், தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 2ன்படி தகவல் என்பது, ஆவணங்களாகவோ மின் அஞ்சல், கருத்துக்கள் ஆலோசனைகள், இதழியல் குறிப்புகள், ஒப்பந்தங்கள் அல்லது மின்னணு வடிவத்தில் இருக்க வேண்டும். (காற்றில் கரைந்து போகும் கருத்தாகவல்லவா பதிவு செய்தார் முன்னெச்சரிக்கையாக) அவ்வாறு தலைமை அமைச்சர் மோடி எந்தவடிவத்திலும் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை எனத் தெரிவித்தது. ஓ! திட்டம் (ஸ்கீம்) மாதிரி 'தகவல்' என்தும் நெருடலான சொல்லோ. இதுதான் பாஜகவின் சொல் விளையாடலா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,768.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



