Show all

கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடிய, பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு அகவை 87.

 சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே என்ற பாடல் 68 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பிரபலம். டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல்.

 

கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்ற பாடலை கேட்டு உருகாதோர் யாரும் இருக்க முடியாது.

குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடினாரோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு தத்ரூபமாகப் பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி என்ற இளம்பெண் என்பதை கேட்ட ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

குழந்தைகளுக்கான பாடலா கூப்பிடு எம்.எஸ்.ராஜேஸ்வரியை என்று அழைக்கும் அளவுக்கு குழந்தைகள் பாட்டுப்படி பிரபலமானவர். கைதி கண்ணாயிரம் படத்தில் வரும் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் பாடல், பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாடல், நான் ஏன் பிறந்தேன் படத்தில் தம்பிக்கு ஒரு பாட்டு முதல், துர்கா படத்தில் பேபி ஷாம்லிக்காக பின்னணிக் குரல் கொடுத்தது வரை பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

குழந்தைகளுக்காக மட்டும் தான் பாடியவர் என்று கூற முடியாத அளவுக்கு பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடியவர். மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவருக்கும் வாய்ப்புக்கொடுத்தார் இளையராஜா. அந்த படத்தில் அவர் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் அப்போது பிரபலமானது.

அதன் பின்னர் சங்கர் கணேஷ் இயக்கத்தில் பல பாடல்களை அவர் பாடினார். அவருக்கு அகவை முதிர்ந்த போதும் குரலுக்கு அகவை முதிரவேயில்லை என்பதை குழந்தை குரலில் பாடி நிரூபித்தார்.

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா(டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே( களத்தூர் கண்ணம்மா), காக்கா காக்கா மைகொண்டா( மகாதேவி) மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்), படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு (படிக்காத மேதை ), சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே ( செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா (திக்குத் தெரியாத காட்டில்) ஆகிய பாடல்கள் பிரபலமானவை, இன்றும் ரசிக்கப்படுபவை.

எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 வது அகவையில் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,768.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.