ஆளுநர் ஆட்சியில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நடுவண் அரசின் நோக்கத்திற்கு முன்னெடுக்கப் படும் என்பதால், அங்கே என்ன நடக்கப் போகிறது? எதற்காக இந்த இராணுவக் குவிப்பு? என்றெல்லாம் புரியாமல் மக்களும் அரசியல் வாதிகளும் குழம்பியிருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடல்; இணைய சேவைகள் முடக்கம்; 144 தடை உத்தரவு என்று செய்திகள் வெளியாகிறது. 20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆளுநர் ஆட்சியில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நடுவண் அரசின் நோக்கத்திற்கு முன்னெடுக்கப் பட்டு வருவதால், அங்கே என்ன நடக்கப் போகிறது? எதற்காக இந்த இராணுவக் குவிப்பு? என்பதெல்லாம், நடுவண் பாஜக அரசு தெளிவு படுத்தினால்தான் உண்டு. இந்த நிலையில் இராணுவக் குவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளை மூட ஆளுநர் அரசு உத்தரவிட்டிருக்கிறது. மறு உத்தரவு வரும்வரை இதேநிலை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இணைய சேவை மற்றும் தரைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பதட்டம் அதிகரித்திருக்கிறது. காஷ்மீர் நிலவரம் தொடர்பாக விவாதிக்க அம்மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று சிறிநகரில் ஒன்று கூடினர். இதில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் மூத்த தலைவருமான மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரங்கள், தன்னாட்சி உள்ளிட்டவைகளைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது என்பது உள்ளிட்ட 3 அறிவிப்புகளைக் கூட்டாக வெளியிட்டனர். அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலிருந்து பயணிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். விமானம், தொடர்வண்டி, பேருந்து உள்ளிட்டவைகள் மூலம் மக்கள் ஜம்மு மற்றும் சிறிநகரை விட்டு வெளியேறுகின்றனர். இதனால், தொடர்வண்டிநிலையங்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. பதட்டம் தொடருவதால் மக்கள் சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், வீட்டுக்குத் தேவையான முதன்மைப் பொருள்களை வாங்கி இருப்பு வைத்துவருகின்றனர். இதனால், பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு நிலையங்களில் நீண்டவரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடுவண் அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து சிறப்புத் தகுதியை ரத்து செய்யும்முடிவில் இருப்பதாக அம்மாநில மக்களிடையே அச்சம் நிலவுகிறது. வரும் விடுதலை நாளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்படும் என காஷ்மீர் மாநிலம் முழுவதும் காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,235.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



