Show all

படிக்கிற பிள்ளைகளுக்கு நீட் போல! குடிக்கிற குடியர்களுக்கு ஏதாவது தடைகளை உருவாக்கினால் தாய்க்குலம் போற்றிக் கொள்ளுமே.

முன்று நாள் தேர்தல் விடுமுறை என்பதால், வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ7.51 கோடிக்கு மது விற்பனை: வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகரிப்பாம்.

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் முந்தாநாள் ஒரே நாளில் ரூ7.51 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. வேலூர் மக்களவை தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று தொடங்கி நாளை வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் விடுமுறை என்பதையறிந்த குடியர்கள் ஏராளமானோர் முந்தா நாளே டாஸ்மாக்கில் குவிந்து மதுவினை வாங்கிச்சென்றுள்ளனர். 

அதன்படி, மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் என இரு டாஸ்மாக் மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் கோடிக்கணக்கில் மது விற்பனையானது.

முந்தாநாள் வழக்கமான விற்பனையை விட இரு மடங்கு விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிக்கிற பிள்ளைகளுக்கு, விரும்புகிற கல்வியைத் தரமுயலாமல், விரும்பிய கல்வியைத் தர மறுப்பதற்கு நுழைவுத் தேர்வு, நீட் என்று ஆயிரம் சுவர்களை எழுப்புகிறது அரசு.  

குடிக்கிற குடியர்களுக்கு, இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ள, சரக்குகளைக் கூடுதல் கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது அதே அரசு.  

கல்வியை மாநிலங்களிடமிருந்து பறிக்கும் நடுவண் அரசு, வரிவாங்கும் உரிமையை, ஒரே வரி (சரக்கு-சேவைவரி) என்று மாநிலங்களிடமிருந்து பறிக்கும் நடுவண் அரசு,  டாஸ்மாக் வணிகத்தை மாநில அரசிடம் இருந்து பறித்து, குடிக்க விரும்புகிற குடி அடிமைகளுக்கு (படிக்கிற பிள்ளைகளுக்கு கல்வியை மறுக்க நீட் நுழைவுத் தேர்வு எல்லாம் வைப்பது போல) ஏதாவது தடைகளை உருவாக்கினால் தாய்க்குலம் நடுவண் அரசை போற்றிக் கொள்ளுமே. தாமரையை மலர செய்தே தீருவேன் என்கிற தமிழிசை பாஜக மேலிடத்திற்கு இந்த ஆலோசனையை வழங்கலாமே. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,234.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.