ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 35அ, 370 ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா. 20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு-காஷ்மீரில் திடீரென பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டார்கள். அந்த மாநிலத்துக்குச் சுற்றுலா சென்ற பயணிகள், அமர்நாத் சென்ற பக்தர்கள் போன்றவர்கள் அவசரமாக அம்மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஜம்மு மற்றும் சிறிநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இவை அனைத்துக்குமான காரணத்தை, இன்று காலை மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு தகுதிகள் வழங்கும் சட்டப்பிரிவுகள் 35அ, 370 ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். காஷ்மீருக்கு அந்த மண்ணை ஆண்ட மாமன்னர் ஹரிசிங் பெற்றத்தந்த சிறப்பு தகுதியை பயன்படுத்தி, இதுவரை அந்த மண்ணில் ஆட்சி புரிந்தவர்கள் சிறப்பாக அந்த மண்ணின் மக்களுக்காக எதையும் சாதித்துக் கொள்ள வில்லை. மேலும் அந்த மாநில மக்கள் தக்கவைத்துக் கொள்வதற்கான தனித்துவமான அடிப்படைகள் எதுவும் இல்லாத நிலையே இன்று அந்த மாநிலம் மாமன்னர் ஹரிசிங் பெற்றுத்தந்த சிறப்புத் தகுதியை இழப்பதற்கான காரணமாக இருக்க முடியும். இம்மாநிலத்தில் ஹிந்து சமயத்தவரின் மக்கள்தொகை 28.44 விழுக்காடாகவும், இசுலாமியர் மக்கள்தொகை 68.31 விழுக்காடாகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 0.28 விழுக்காடகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 1.87 விழுக்காடகவும், சமண சமய மக்கள்தொகை 0.02 விழுக்காடாகவும், பௌத்த சமய மக்கள் தொகை 0.90 விழுக்காடாகவும், பிற சமயத்து மக்கள்தொகை 0.01 விழுக்காடாகவும் உள்ளன. சம்மு காசுமீர் மாநிலத்தின் முதன்மை மொழிகள்: காஷ்மீரி மொழி உருது மொழி, தோக்ரி மொழி, பகாரி மொழி, பால்டி மொழி, லடாக் மொழி, பஞ்சாபி, கோஜ்ரி மொழி மற்றும் தாத்ரி மொழி ஆகியன ஆகும். பாரசீக-அரபி எழுத்துக்களால் எழுதப்படும் உருது மொழி மாநிலத்தின் அலுவல் மொழியாகும். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டாவது மொழிகளாக உள்ளன. ஹிந்தி மொழி வடமொழி எழுத்துக்களை கொண்ட உருது. உருது மொழி அரபு எழுத்துக்களை கொண்ட ஹிந்தி. மொழி அடிப்படையாக பெரிய தனித்துவம் எல்லாம் காஷ்மீருக்கு கிடையாது. காஷ்மீர் மாநிலத்திற்குள் இசுலாமியம், ஹிந்து, பௌத்தம் என்ற மூன்று மதங்களும் புழங்குகின்றன. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை, பாரளுமன்ற உறுப்பினர்களை எளிதாக பெற முடிகிற மாநிலம்தான் காஷ்மீர். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது காஷ்மீரின் மன்னர் ஹரிசிங், தன் மக்களின் நலன் கருதி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொள்வேன் என்று உறுதியாக இருந்தார். பாகிஸ்தான், காஷ்மீரைக் கைப்பற்றத் துடித்துக்கொண்டிருந்த காரணத்தினால், இந்தியத் தலைவர்கள் காஷ்மீருக்காகச் சிறப்பு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார்கள். அப்படிக் கொண்டுவரப்பட்டதுதான் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35அ. இந்தச் சட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்பது பொதுவான அரசியல் அறிஞர்களின் கருத்து. மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் ஒரு பிடி மண்கூட வாங்கிவிட முடியாது. மேலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. பாதுகாப்புத் துறை, தகவல் தொடர்புத் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை தவிர, காஷ்மீர் தொடர்பான எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும், காஷ்மீர் சட்டமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். காஷ்மீர் பெண்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தால், காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமையை இழக்கிறார்கள். அதே வேளை, ஆண்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை மணம் புரிந்தால், அங்கே நிலம் வாங்க உரிமை உண்டு. அரசியலமைப்புச் சட்டம் 35 ஏ, காஷ்மீரின் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு, அசையா சொத்துகள் வாங்குவது மற்றும் அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மாநிலங்களில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும். நடுவண் அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் காஷ்மீர் மாநிலத்தில் செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் கட்சிகளையும், அந்த மாநிலத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வருகின்ற போராளி அமைப்புகளையும் ஒடுக்க முடியும். காஷ்மீருக்கு உள்ள மாநில உரிமைகள் எல்லாம் மறுக்கப் பட்டு, இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ளது போல காஷ்மீரிலும் அனைத்து உரிமைகளிலும் நடுவண் அரசு தலையிட முடியும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,235.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



