Show all

ஸ்டாலின் மோடியிடம் வைத்த ஒரு தொலைநோக்கு கோரிக்கை! சென்னையைத் தென்னிந்தியாவின் சட்டத் தலைநகராக மாற்றும்: பாராட்டும் அறிஞர்கள்

ஸ்டாலின் மோடியிடம் வைத்த ஒரு தொலைநோக்கு கோரிக்கை சென்னையைத் தென்னிந்தியாவின் சட்டத் தலைநகராக மாற்றும் என்று பாராட்டுகின்றனர் சட்டத்துறை அறிஞர்கள்

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று தலைமைஅமைச்சர் மோடியைச் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 22 கோரிக்கைகளை வைத்தார். இதில் தமிழ்நாட்டிற்கான சட்ட அதிகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை ஒன்று தொலைநோக்கு சார்ந்தது என்று அறிஞர்களால் பாராட்டுபெற்று வருகிறது. 

நேற்று தலைமைஅமைச்சர் மோடிக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. 25 நிமிடங்கள் இவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் பல்வேறு விடையங்கள் விவாதிக்கப்பட்டன.

தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்றபின் முதல்முறை ஸ்டாலின் தலைமைஅமைச்சருடன் சந்திப்பு நடத்தி உள்ளார். 25 முதன்மையான கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையில் தலைமைஅமைச்சரிடம் வைத்தார். 

இந்தச் சந்திப்பில் நீட் தேர்வு நீக்கம், செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பு, ஆறுகள் இணைப்பு, மூன்று வேளாண் சட்ட நீக்கம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை வேகமாக அமைப்பது, கோவையிலும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது என்று பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இதில் வைத்தார். 

இதில் சென்னையில் உச்ச அறங்கூற்றுமன்றக் கிளையை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். டெல்லியில் உச்ச அறங்கூற்றுமன்றம் இருக்கும் நிலையில் சென்னையில் இதன் கிளையை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். 

பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பதினெட்டாவது சட்ட ஆணையம் வைத்த பரிந்துரை அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார். அந்த ஆணையம் இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய மூன்று மாநிலங்களில் கூடுதலாக உச்ச அறங்கூற்றுமன்றக் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது. 

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் முதலாவதாக இந்த கோரிக்கையை தலைமைஅமைச்சரிடம் வைத்துள்ளார். இது ஒரு வகையில் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் முதன்மைத்துவத்தைக் கொடுக்கும். சென்னையில் உச்ச அறங்கூற்றுமன்றக் கிளை அமைக்கப்பட்டால் தென் மாநில வழக்குகள் அனைத்தும் இங்கேயே விசாரிக்கப்படும். இது தென் மாநிலங்களுக்கு இடையில் சென்னையை அதிக முதன்மைத்துவம் பெற வைக்கும். தெலுங்கானா, கர்நாடகா, கோவா, ஆந்திர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலத்தின் உச்ச அறங்கூற்றுமன்ற வழக்குகள் சென்னையில் நடக்கும். இது சென்னையை தென்னிந்தியாவின் சட்டத் தலைநகராக மாற்றும். 

ஆனால் இப்போதைக்கு உச்ச அறங்கூற்றுமன்றத்தை விரிவாக்கும் முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஒருவேளை உச்ச அறங்கூற்றுமன்றம் விரிவாக்கப்பட்டால், சென்னையில் அதன் கிளை அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 

சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தின் மதுரைக் கிளையின் சிறப்பு அம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்தால்- ஸ்டாலின் தலைமைஅமைச்சரிடம் முன்னெடுத்த இந்த கோரிக்கையால் உச்சஅறங்கூற்றுமன்றத்தின் கிளையொன்று சென்னையில் அமைக்கப்படும் போது தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென் மாநிலங்களும் சிறப்பானதொரு பலனைப் பெறமுடியும் என்கின்றனர் சட்டத்துறை அறிஞர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.