Show all

தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை! தானியங்கிப்பாட்டுத் தொழில் நுட்ப முன்னெடுப்பு காரணம்

தகவல் தொழில் நுட்பத்துறையிலும்  தானியங்கிப்பாட்டுத் தொழில் நுட்பம் முன்னெடுப்பு காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் பேசுபொருளாகியுள்ளது.

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தகவல் தொழில் நுட்பத்துறையிலும்  தானியங்கிப்பாட்டுத் (ஆட்டோமேசன்) தொழில் நுட்பத்தின் முன்னெடுப்பு காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் பேசுபொருளாகியுள்ளது.

உலகளவில் தற்போது அனைத்து துறைகளிலும், வணிகத்திலும் தகவல்தொழில்நுட்பச் சேவைகளில் தானியங்கிப்பாடு (ஆட்டோமேசன்)  புகுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாகக் கொரோனா ஊரடங்கிற்குப் பின் இந்திய நிறுவனங்கள் தானியங்கிப்பாட்டுச் சேவைகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

இதன் எதிரொலியாக இந்தியத் தகவல்தொழில்நுட்பத் துறையில் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 30 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

30 லட்சம் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதன் மூலம் சம்பளம் மற்றும் இதர செலவுகள் வாயிலாக மட்டுமே சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்தியத் தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள் சேமிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியத் தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள் இடையே அதிகளவிலான போட்டி இருக்கும் காரணத்தால் பணிகளை வேகமாகவும், குறைந்த செலவுகளில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எப்போதும் இருக்கும்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டிய பல பிரிவுகள் வணிகத்தைச் முழுமையாகச் செய்ய முடியாமல் முடங்கின. இதன் வாயிலாகவே இந்தியத் தகவல்தொழில் நுட்ப நிறுவனங்களுக்குத் தற்போது தானியங்கிப்பாடு (ஆட்டோமேசன்)  மிகவும் முதன்மைத்துவமாக மாறியுள்ளது.

தொழில்நுட்பத் துறையில் இருக்கும் நிறுவனங்களும், உள்நாட்டு மென்பொருள் சேவை நிறுவனங்களும் தானியங்கிப்பாட்டைக் கையில் எடுக்க முடிவு செய்துள்ளன. இதனால் அடுத்த ஒரு ஆண்டு காலத்தில் இந்தியத் தகவல்தொழில் நுட்பத் துறையில் அதிகளவிலானோர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என ஒன்றிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்) அறிவித்துள்ளது.

இந்தியத் தகவல்தொழில்நுட்பத் துறையில் சுமார் 1.6 கோடி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 90 லட்சம் பேர் குறைந்த திறன் சேவை பிரிவுகளிலும், இயங்கலை வங்கி வணிகப் பிரிவுகளிலும் பணியாற்றி வருகிறார்கள் என ஒன்றிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் தரவுகள் தெரிவிக்கிறது.

குறைந்த திறன் சேவை பிரிவு மற்றும் இயங்கலை வங்கி வணிகப் பிரிவுகளில் தானியங்கிப்பாடு அதிகளவில் புகுத்தப்படும் காரணத்தால் 90 லட்சம் ஊழியர்களில் 30 லட்சம் ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். இதில் குறிப்பாக 7 லட்சம் பேரின் வேலைகள் முழுமையாக தானியங்கிப்பாடு செய்யப்பட உள்ளது.

அண்மையில் பாங்க் ஆப் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவில் தானியங்கிப்பாடு வாயிலாக மட்டும் சுமார் 10 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறைந்த திறன் சேவை பிரிவு மற்றும் வங்கி வணிகப்  பிரிவுகளில் பணியாற்றும் இந்திய ஊழியருக்கு ஆண்டுக்கு 25,000 டாலரும், அமெரிக்க ஊழியருக்கு ஆண்டுக்கு 50,000 டாலர் அளவிலான சம்பளம் அளிக்கப்படுகிறது.

தற்போது 30 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் போது 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சேமிக்க முடியும் எனவும் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்நிலையில் தற்போது டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகியன தங்கள் நிறுவனங்களில் தானியங்கிப்பாட்டை செயல்படுத்தவும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் வகைக்கான பணிகளில் இறங்கியுள்ளன.

ஒரு பக்கம் 100 பில்லியன் டாலர் சேமிப்பு மட்டும் அல்லாமல் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான தானியங்கிப்பாட்டு மென்பொருள் நிறுவும் வணிகத்தையும் பெற முடியும். 5 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய மென்பொருள் உருவாக்குவதற்கான வணிகத்தையும் பெற முடியும்.

அனைத்தையும் தாண்டி இந்தியத் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், அவற்றின் சேவையை நம்பியிருக்கும் பிற துறை நிறுவனங்களுக்கும் இத்தகைய தானியங்கிப்பாடு சேவை நிறுவப்படுவதன் மூலம் 24 மணிநேரமும் இயங்கும் ஒரு சேவை தளமும், 10 ஊழியர்கள் பணியாற்றும் வேலையை ஒரு கணினி முடிக்கமுடியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.